வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்து 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டி ட்ராவில் முடிந்த நிலையில் 2வது போட்டியில் நியூஸிலாந்து எளிதாக 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இறுதியாக அத்தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி டிசம்பர் 18ஆம் தேதி மௌன்ட் மௌங்கனி மைதானத்தில் துவங்கியது.
இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. பொதுவாகவே நியூசிலாந்து தங்களது சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதே வழக்கமாகும். இருப்பினும் இப்போட்டியின் பிட்ச் ஃபிளாட்டாக பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருப்பதாக நியூசிலாந்து கருதியது.
முதல் நாளே நொறுக்கிய நியூஸிலாந்து:
அதனால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் மாறுபட்ட முடிவை நியூஸிலாந்து எடுத்தது. அதைத்தொடர்ந்து துவங்கிய போட்டியில் டாம் லாதம் மற்றும் டேவோன் கான்வே மிகவும் பொறுப்பாகவும் நிதானமாகவும் பேட்டிங் செய்தனர். முதல் நாள் உணவு இடைவெளி தாண்டியும் அவுட்டாகாத அவர்கள் நியூசிலாந்துக்கு 100 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர்.
அதில் இருவருமே அரை சதமடித்து வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை பந்தாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். நேரம் செல்ல செல்ல நங்கூரமாக விளையாடிய அந்த ஜோடி இரட்டை சதம் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. அப்போதும் ஓயாத அந்த ஜோடி தொடர்ந்து நங்கூரமாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் போதுமென்று சொல்லும் அளவுக்கு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முச்சதம் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
95 வருட சாதனை:
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது சொந்த மண்ணில் முச்சதம் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் நியூசிலாந்து ஓப்பனிங் ஜோடி என்ற வரலாற்றை டாம் லாதம் – கான்வே படைத்துள்ளார்கள். இதற்கு முன் 1930ஆம் ஆண்டு வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்துக்காக சிஎஸ் டெம்ப்ஸ்டர் – ஜேஇ மில்ஸ் ஜோடி 276 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய அதிகபட்சமாகும்.
இதையும் படிங்க: கிளென் மெக்ராத்தின் ஆல்டைம் சாதனையை கடந்து வரலாறு நிகழ்த்திய நாதன் லயன் – விவரம் இதோ
தற்போது அந்த 95 வருட சாதனையை உடைத்து புதிய வரலாறு படைத்த கேப்டன் லாதம் சதமடித்து 137 ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் 323 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த டேவோன் கான்வே சதத்தையும் தாண்டி 178* ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார். அதனால் முதல் நாளில் 334/1 ரன்கள் குவித்துள்ள நியூஸிலாந்துக்கு கான்வேயுடன் களத்தில் ஜேக்கப் டுபி 9* ரன்களுடன் கைகொடுக்கிறார்.



