NZ vs SL : இலங்கைக்கு இப்படி ஒரு நிலையா? 1979க்குப்பின் நேர்ந்த மெகா உ.கோ அவமானம் – தொடரை வென்ற நியூஸிலாந்து

- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்து வரை போராடி நியூசிலாந்து வென்றதால் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மோதுவதற்கு தகுதி பெற்றது இலங்கையின் வாய்ப்பை உடைத்தது. அதைத்தொடர்ந்து இந்திய மண்ணில் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்ற நியூசிலாந்து 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

அதை தொடர்ந்து நடைபெற்ற 2வது போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்ட நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி மார்ச் 31ஆம் தேதியன்று ஹமில்டன் நகரில் இருக்கும் செடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பெர்னாண்டோ 2, குசால் மெண்டிஸ் 0, அஞ்சேலோ மேத்தியூஸ் 0, சரித் அசலங்கா 9, டீ சில்வா 13 என முக்கிய பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்தின் அதிரடியான ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு தாக்க பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றனர்.

- Advertisement -

மெகா அவமானம்:
அதனால் 70/5 என திண்டாடிய அந்த அணியை மறுபுறம் பொறுப்புடன் செயல்பட்டு காப்பாற்ற போராடிய மற்றொரு தொடக்க வீரர் பதும் நிசாங்கா 8 பவுண்டரி 1 சிக்சருடன் 57 (64) ரன்களில் ரன் அவுட்டாகி சென்ற நிலையில் கேப்டன் சனாக்கா 31, கருணரத்னே 24 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் போராடி குறைவான ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 41.3 ஓவரிலேயே 157 ரன்களுக்கு இலங்கையை சுருட்டிய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி, ஹென்றி ஷிப்லே, டார்ல் மிட்சேல் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதை தொடர்ந்து 158 ரன்களை துரத்திய சாட் பௌஸ் 1, டாம் ப்ளண்டல் 4 என தொடக்க வீரர்களை லகிரு குமாரா தனது முதல் ஓவரில் சொற்ப ரன்களில் காலி செய்தார். அடுத்து வந்த டார்ல் மிட்சேல் 6, கேப்டன் டாம் லாதாம் 8 ரன்களில் அவுட்டானதால் 59/4 என தடுமாறிய அந்த அணிக்கு 3வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக செயல்பட்ட வில் எங் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 11 பவுண்டரியுடன் 86* (114) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

அவருடன் 5வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஹென்றி நிக்கோலஸ் 5 பவுண்டரியுடன் 44* (52) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்தார். அதனால் 32.5 ஓவரிலேயே 159/4 ரன்கள் எடுத்த நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்று சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய இலங்கைக்கு பந்து வீச்சில் லஹிரு குமாரா 2 விக்கெட்களை எடுத்தும் குறைவான இலக்கு இருந்ததால் வெற்றி காண முடியவில்லை.

அதைவிட சமீப காலங்களில் கத்துக் குட்டியாக செயல்படுவதால் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் கீழ் வரிசையில் திண்டாடும் இலங்கை இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெறும் 2023 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற ஐசிசி ஒன்டே சூப்பர் லீக் தொடரின் அங்கமாக நடைபெற்ற இந்த தொடரில் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

- Advertisement -

ஆனால் இத்தொடரில் தோல்வியை சந்தித்ததால் 2023 ஒன்டே சூப்பர் லீக் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை மட்டுமே பிடித்த இலங்கை இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழந்துள்ளது. இதன் காரணமாக 2023 அக்டோபருக்கு முன்பாக நடைபெறும் தகுதி சுற்றில் நெதர்லாந்து போன்ற கத்துக்குட்டிகளுகடன் மோதி அதில் வென்றால் மட்டுமே 2023 உலக கோப்பைக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: IPL 2023 : இன்றைய முதல் போட்டியிலேயே தல தோனி மிகப்பெரிய சாதனையை நிகழ்த்த வாய்ப்பு – விவரம் இதோ

1996 உலக கோப்பை சாம்பியனான இலங்கை கடைசியாக கடந்த 1979ஆம் ஆண்டு தான் இப்படி உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறாமல் தகுதி சுற்றில் விளையாடிது. அதன்பின் 44 வருடங்கள் கழித்து இப்படி ஒரு அவமான நிலைமையை இலங்கையை சந்தித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.

Advertisement