
நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து எளிதாக வென்றது. 2வது போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி புலவாயோ நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே மிகவும் தடுமாற்றமாக விளையாடி 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பிரண்டன் டைலர் 44 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5, ஜக்காரி போல்க்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய நியூஸிலாந்து அபாரமாக பேட்டிங் செய்து 601/3 ரன்கள் அடித்து தங்களுடைய ஆட்டத்தை டிக்ளர் செய்தது.
அதிகபட்சமாக டேவோன் கான்வே 153, ரச்சின் ரவீந்திரா 165*, ஹென்றி நிக்கோலஸ் 150* என 3 நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சதத்தை அடித்து பெரிய ரன்கள் குவித்து அசத்தினார்கள். அடுத்து விளையாடிய ஜிம்பாப்வே முன்பை விட மோசமாக பேட்டிங் செய்து வெறும் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக நிக் வெல்க் 47* ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக ஜக்காரி போல்க்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதனால் இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மெகா வெற்றி பெற்றது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து நியூசிலாந்து உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 1958ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 336 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் தோற்கடித்ததே முந்தைய 3வது பெரிய உலக சாதனை வெற்றியாகும்.
1938 ஓவல் போட்டியில் ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் மற்றும் 579 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்ததே உலக சாதனை வெற்றியாகும். 2002 ஜோஹன்ஸ்பர்க் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 360 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது 2வது உலக சாதனை வெற்றியாகும். இது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து அணி தங்களுடைய பெரிய வெற்றியைப் பெற்று வரலாறு படைத்துள்ளது.
இதையும் படிங்க: அன்ஷுல் கம்போஜ்க்கு கொடுத்த வாய்ப்பை ஏன் அர்ஷ்தீப் சிங்குக்கு கொடுக்கல? – கேள்வி எழுப்பிய முன்னாள் வீரர்
இதற்கு முன் 2002 நேப்பியர் போட்டியில் இதே ஜிம்பாப்வே அணியை இன்னிங்ஸ் மற்றும் 301 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததே நியூசிலாந்தின் முந்தைய பெரிய வெற்றியாகும். அதனால் 2 – 0 (2) என்ற கணக்கில் நியூசிலாந்து இந்த தொடரை ஒய்ட்வாஷ் செய்து வென்றது. மறுபுறம் ஜிம்பாப்வே டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.