ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்றது. இம்முறை ஒருநாள் நடைபெறும் அந்த மினி ஏலம் மதியம் 3:00 மணிக்கு துவங்கியது. அந்த ஏலத்தில் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனை வாங்குவதற்கு அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டின.
குறிப்பாக அதிக தொகைகளை கையிருப்பு வைத்துள்ள கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் அவரை வாங்குவதற்கு மல்லுக்கட்டின. அதனால் கிடுகிடுவென எகிறிய அவருடைய மதிப்பு 20 கோடிகளை தாண்டி சென்றது. இறுதியில் சென்னையை முந்திய கொல்கத்தா 25.20 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு கேமரூன் கிரீனை தங்களுடைய அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்தது.
7.20 கோடி பிசிசிஐக்கு:
இதன் வாயிலாக ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போன வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை கிரீன் படைத்துள்ளார். இதற்கு முன் 2004 சீசனில் ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டாக் 24.75 கோடிக்கு வாங்கப்பட்டதே முந்தைய சாதனை. இருப்பினும் இம்முறை கேமரூன் கிரீனுக்கு 18 கோடிகள் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்படும். எஞ்சிய 7.20 கோடியை கொல்கத்தா அணி பிசிசிஐ வீரர்கள் நலவாழ்வு நிதிக்காக கொடுக்க வேண்டும்.
அதற்கான காரணம் என்னவெனில் சமீப காலங்களாக சில வெளிநாட்டு வீரர்கள் வேண்டுமென்றே ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொள்ளாமல் மினி ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏனெனில் பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் மெகா ஏலத்தில் ஏதேனும் ஒரு அணிக்காக வாங்கப்பட்டிருப்பார்கள். எனவே மினி ஏலத்தில் குறைவான நட்சத்திர வீரர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். அதனால் அவர்கள் மட்டும் பெரிய தொகைக்கு விலை போவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
புதிய விதிமுறை:
சொல்லப்போனால் அந்த முறையில் தான் 2024 ஐபிஎல் மினி ஏலத்தில் பட் கமின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் 20க்கும் மேற்பட்ட கோடிகள் தொகைக்கு வாங்கப்பட்டனர். ஆனால் இங்கே காலம் காலமாக விளையாடி ஐபிஎல் தொடரை பிரபலப்படுத்திய தோனி, விராட் கோலிக்கு கூட அவ்வளவு சம்பளம் கிடைத்ததில்லை. எனவே வெளிநாட்டு வீரர்களின் சம்பளத்திற்கு வரையறுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தன.
இதையும் படிங்க: 209 ரன்ஸ்.. ராயுடுவை முந்திய குண்டு.. 2வது உலக சாதனையுடன் இந்தியாவுக்காக வரலாறு காணாத சாதனை
அதை தற்போது ஏற்றுக்கொண்ட பிசிசிஐ 18 கோடிக்கு மேலே வாங்கப்படும் வெளிநாட்டு வீரர்களின் எஞ்சிய தொகை வீரர்கள் நலவாழ்வு நிதிக்கு செலுத்தப்படும் என்று அறிவித்தது. அந்த விதிமுறைப்படியே தற்போது க்ரீனுக்கு 18 கோடி மட்டும் சம்பளம் கொடுக்கப்பட உள்ளது. இந்த விதிமுறை வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒருவேளை இந்திய வீரர் 18 கோடிக்கு மேல் வாங்கப்பட்டால் முழுத் தொகையும் அவருக்கே கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



