துபாயில் அண்டர்-19 ஆசியக் கோப்பை 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களது முதல் 2 போட்டிகளில் அமீரகம் மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்தது. அதனால் சூப்பர் 4 சுற்று வாய்ப்பை உறுதி செய்த இந்தியா தங்களது கடைசி லீக் போட்டியில் மலேசியாவை எதிர்கொண்டது. அப்போட்டி டிசம்பர் 16ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு துவங்கியது.
அதில் டாஸ் வென்ற மலேசியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே 14 (7) ரன்கள் அடித்து அவுட்டானார். அடுத்து வந்த விகான் மல்கோத்ரா 7 (14) ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய வைபவ் சூரியவன்சி 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 50 (26) ரன்களை விளாசி அவுட்டானார்.
அபிஞான் இரட்டை சதம்:
அவருடன் இணைந்து விளையாடிய வேதாந்த் திரிவேதி நங்கூரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எதிர்ப்புறம் வந்த அபிஞான் குண்டு அதிரடியாக விளையாடி அரை சதமடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 209 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் போட்ட திரிவேதி சதத்தை நழுவ விட்டு 7 பவுண்டரியுடன் 90 (106) ரன்கள் குவித்து பெவிலியின் திருப்பினார்.
மறுபுறம் தொடர்ந்து அசத்திய குண்டு சதமடித்து இந்தியாவை 300 ரன்களை தாண்ட வைத்தார். எதிர்ப்புறம் வந்த ஹர்வன்ஸ் பங்காளியா 5, கனிஸ்க் சௌஹான் 14, கிளன் பட்டேல் 2 ரங்களிக் அவுட்டானார்கள். ஆனால் அவர்களுக்கும் சேர்த்து மறுபுறம் மலேசியாவை அடித்து நொறுக்கிய குண்டு 17 பவுண்டரி 9 சிக்ஸரை பறக்க விட்டு இரட்டை சதமடித்து 209* (125) ரன்கள் குவித்தார்.
வரலாறு காணாத சாதனை:
இதன் வாயிலாக அண்டர்-19 ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாறு காணாத சாதனையை அபிஞான் படைத்துள்ளார். அத்துடன் அண்டர்-19 ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையையும் குண்டு படைத்துள்ளார். இதற்கு முன் 2002ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்காக அம்பத்தி ராயுடு 177* (169) ரன்கள் அடித்ததையும் முந்தைய சாதனை.
இதையும் படிங்க: ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க.. மோர்னே மோர்கலிடம் மன்னிப்பு கேட்ட அர்ஷ்தீப் சிங் – என்ன நடந்தது?
ஒட்டுமொத்தமாக 2வது அதிகபட்ச ஸ்கோர் (209*) பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையையும் குண்டு படைத்துள்ளார். முதல் உலக சாதனை (215) ஸ்கோரை 2025இல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் வேன் ஸ்கால்விக் அடித்துள்ளார். இறுதியில் அவருடைய அட்டகாசமான ஆட்டத்தால் 50 ஓவரில் இந்திய அண்டர்-19 அணி 408/7 ரன்களை குவித்து மிரட்டியது. மலேசியாவுக்கு அதிகபட்சமாக முகமது அக்ரம் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.



