ஆஸி தொடரில் தேர்வான நெய்ல் வாக்னர்.. பாதியிலேயே திடீரென கண்ணீர் மல்க ஓய்வு.. காரணம் என்ன?

Neil Wagner
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதைத் தொடர்ந்து 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக இவ்விரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அதில் நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளர் நெய்ல் வேக்னர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நெய்ல் வேக்னர் திடீரென்று அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அவர் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி 2012ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.

- Advertisement -

கண்ணீர் மல்க ஓய்வு:
அந்த வாய்ப்பில் இடது கை வேகப்பந்து வீச்சாளராக எதிரணிகளுக்கு சவாலை கொடுத்த அவர் இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 260 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். குறிப்பாக ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளை துல்லியமாக வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திண்டாட வைப்பதில் கில்லாடியான அவர் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றியவர்.

தற்போது 37 வயதாகும் அவர் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்தார். தற்போது அதிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் கண்ணீர் மல்க அறிவித்துள்ளார். சொல்லப்போனால் இத்தொடரில் தேர்வானதால் சொந்த மண்ணில் வழியனுப்பும் போட்டியுடன் விடை பெற அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை வேண்டாமென முடிவெடுத்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விடை பெற்று அடுத்த தலைமுறைக்கு வழி விட இதுவே சரியான நேரம் என்று கருதுவதாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “இது உணர்வுப்பூர்வமான வாரமாகும். நீங்கள் விரும்பி செய்ததிலிருந்து வெளியேறுவது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் இது மற்ற வீரர்கள் வந்து அணியை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான நேரமாகும். நியூசிலாந்துக்காக ஒவ்வொரு போட்டியிலும் மகிழ்ச்சியுடன் விளையாடிய நான் இதுவரை சாதித்ததற்காக பெருமையடைகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஆர்.சி.பி தான் இந்தமுறை ஐ.பி.எல் கோப்பையை ஜெயிக்கனும்.. என்னோட ஆசை அதுதான்.. ஏன் தெரியுமா? – ரெய்னா விருப்பம்

மேலும் தம்முடைய கேரியரில் உதவியாக இருந்த சக வீரர்கள், நண்பர்கள், மனைவி, குழந்தைகள் மற்றும் ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். மொத்தத்தில் நியூசிலாந்துக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 5வது வீரராக விடைபெறும் அவர் குறைந்தது 100 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் ஜாம்பவான் ரிச்சர்ட் ஹாட்லிக்கு (50.80) பின் சிறந்த ஸ்டிரைக் ரேட்டை (52.70) கொண்டவராகவும் பெருமையுடன் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement