இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக வரலாறு காணாத ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அந்த தோல்விக்கு விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மாவின் சுமாரான பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது.
அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இந்திய ரசிகர்கள் அந்த இரு வீரர்களையும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் மார்க் டெய்லர், முகமது அசாருதீன் ஆகியோர் வருட கணக்கில் சுமாரான ஃபார்மில் இருந்ததாக முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து தெரிவித்துள்ளார்.
சித்து ஆதரவு:
எனவே 6 மாதத்திற்கு முன் பெற்றுக் கொடுத்த டி20 உலகக் கோப்பை வெற்றியை மறந்து விட்டு ரசிகர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவை விமர்சிப்பது சரியல்ல என்று அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி சித்து பேசியது பின்வருமாறு. “சிலர் இரண்டு மாதங்கள் சுமாரான பார்மில் இருந்தால் அவரை நீங்கள் உடனடியாக டெலிட் செய்ய முடியாது. நீங்கள் வெற்றிகளில் ஓய்வெடுக்க முடியாது என்று எனக்கு தெரியும்”
“வெற்றி பெற்ற பின்பும் உங்களை புதுப்பிக்க வேண்டும். அதற்கு நீங்கள் கொஞ்சம் நேரத்தை கொடுக்க வேண்டும். மார்க் டெய்லர் 1.5 வருடங்கள் சுமாராக விளையாடினார். முகமது அசாருதீனும் அதே போல தடுமாறினார். 8 இன்னிங்ஸ் மோசமாக விளையாடினால் மீண்டும் கம்பேக் கொடுக்க எனக்கு ஒரு இன்னிங்ஸ் மட்டும் தேவைப்படும் என்று சௌரவ் கங்குலி சொல்வார்”
கல்லை போடாதீங்க:
“6 மாதங்களுக்கு முன்பாக அவர்கள் உலகக் கோப்பையை வென்றார்கள். எனவே அவர்கள் இருவரை மட்டும் குறி வைத்து மற்றவர்களை உங்களால் புறக்கணிக்க முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் யார் தான் தொடர்ச்சியாக அசத்தினார்கள்? குறை சொல்வது மிகவும் எளிது. அவர்கள் மீது கல்லை எறிவதும் எளிது. ஆனால் சிலர் மட்டுமே தங்கள் மீது எறியப்படும் கல்லை வைத்து வீடு கட்டுவார்கள்”
இதையும் படிங்க: ரோஹித்தை தள்ளிய நயவஞ்சகர்.. தோனியை சொன்ன நீங்க சுயநலமா இல்லாம இருங்க.. கம்பீரை சாடிய மனோஜ் திவாரி
“அவர்கள் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. விராட் கோலி விமர்சனத்தை சந்திப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன் அவருடைய மனைவியும் விமர்சனத்திற்குள் இழுக்கப்பட்டுள்ளார். அவ்வாறு செய்வது தவறு நாம் நம்முடைய ஹீரோக்களுக்கு பொறுமையுடன் ஆதரவு கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடினமான காலங்களில் சென்று வருவார்கள்” எனக் கூறினார்.



