இந்திய அணி சொந்த மண்ணில் கடந்த வருடம் நியூசிலாந்திடம் வரலாறு காணாத ஒயிட்வாஸ் தோல்வியைச் சந்தித்தது. அந்த வேதனை தீர்வதற்குள் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி சொந்த மண்ணில் 25 வருடங்கள் கழித்து தோற்றது. அதனால் சொந்த மண்ணில் எப்படி சுழல் பந்துகளை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதை இந்திய அணி மறந்து விட்டதா? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஒருமுறை இலங்கையின் சனாத் ஜெயசூர்யாவுக்கு எதிரான சுழல் பந்தில் அவுட்டானதால் சச்சின் டெண்டல்கர் மிகவும் ஏமாற்றமடைந்ததாக முன்னாள் வீரர் சித்து தெரிவித்துள்ளார். அதற்காக சண்டிகரிலிருந்து 10 ஸ்பின்னர்களை அழைத்து வந்த சச்சின் நாள் முழுவதும் வெறித்தனமாக பயிற்சி எடுத்ததாகவும் சித்து தெரிவித்துள்ளார். அதே போல தற்போதைய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பயிற்சிகளை எடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெறியான சச்சின்:
இது பற்றி சித்து பேசியது பின்வருமாறு. “சச்சின் ஒரு டெஸ்ட் போட்டியில் சனாத் ஜெயசூர்யாவால் கட்டப்பட்டார். அப்போட்டியில் நான் எதிர்ப்புறம் பேட்டிங் செய்தேன். ஜெயசூர்யா தொடர்ந்து அவுட்சைட் லெக் ஸ்டம்ப் பகுதியில் பந்துகளைப் போட்டார். அதனால் விரக்தியடைந்த சச்சின் ஃபுல் அடிக்க முயற்சித்து அவுட்டானார். ஏனெனில் அவருக்கு ஸ்வீப் ஷாட் அடிக்கத் தெரியாது”
“அன்றைய நாளின் முடிவில் அனைத்து வீரர்களும் வெளியேறினார்கள். ஆனால் சச்சின் மட்டும் உடைமாற்றும் அறையிலேயே உட்கார்ந்திருந்தார். அப்போது எங்கள் மேனேஜர் அஜித் வடேகர் சார் சச்சினை பேருந்துக்கு அழைத்து வருமாறு என்னிடம் சொன்னார். அதனால் அங்கே சென்ற என்னிடம் “இப்படி நடந்திருக்கக்கூடாது” என்று சச்சின் சொன்னார்”
இந்தியா கத்துக்கனும்:
“அதற்கு என்னவாயிற்று? ஒருமுறை தானே அவுட்டானாய், பரவாயில்லை வா என்று சச்சினிடம் நான் சொன்னேன். அடுத்த நாளே சண்டிகரிலிருந்து 10 இடது கை ஸ்பின்னர்களை வரவைத்த சச்சின் மைதானத்துக்கு காலை 7:00 மணிக்கே சென்று தொடர்ந்து ஸ்வீப் ஷாட்டுகளை அடித்தார். அதற்கு முன் சச்சின் ஸ்வீப் அடித்து நான் பார்த்ததில்லை. மதிய உணவின் போது நான் அஜய் ஜடேஜா, சஞ்சய் மஞ்ரேக்கர் ஆகியோர் இருந்தோம்”
இதையும் படிங்க: இதை செஞ்ச அப்றமும் கம்பீருக்கு பாராட்ட மனசில்ல.. விராட், ரோஹித்தை பற்றி பேசல.. உத்தப்பா அதிருப்தி
“அப்போது சாப்பிடும் கரண்டியில் கூட சச்சின் ஸ்வீப் ஷாட்டுகளை முயற்சித்தார். அந்த வகையில் ஒரு விஷயத்தை சச்சின் கையிலெடுத்தால் அதையே சுவாசிப்பார். கிரிக்கெட் தான் அவருடைய வாழ்க்கை. அப்படி அவுட்டானதால் அவருடைய பெருமை காயமடைந்தது. அதே போல சொந்த ஊரில் இந்தியா தோற்றதால் காயமடைந்திருப்பார்கள். தற்போது நீங்கள் மீண்டும் பழைய இடத்திற்கு மட்டும் திரும்பக்கூடாது. அங்கே செல்வதற்கான அர்த்தத்தை நீங்கள் கவனித்துக் கொண்டால் லட்சியம் உங்களை கவனித்துக் கொள்ளும்” என்று கூறினார்.



