
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் முள்ளான்பூர் நகரில் ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற்ற 22வது போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை பஞ்சாப் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணிக்கு ஒருபுறம் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 83/5 என தடுமாறிய பஞ்சாப்புக்கு மறுபுறம் 24 வயதில் இளம் வீரர் பிரியான்ஸ் ஆர்யா சிஎஸ்கே பவுலர்களை புரட்டி எடுத்தார்.
தொடர்ந்து பட்டாசாக விளையாடிய அவர் 39 பந்துகளில் சதத்தை அடித்து 103 ரன்கள் விளாசினார். இதன் வாயிலாக தனது அறிமுக ஐபிஎல் தொடரிலேயே சதத்தை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பிரியான்ஸ் படைத்தார். மேலும் விராட் கோலியை முந்தி ஓவர்கள் அடிப்படையில் வேகமான சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
அவருடைய ஆட்டத்தால் 220 ரன்களை இலக்காக நிர்ணயித்த பஞ்சாப் பின்னர் சென்னையை 201-5 ரன்களுக்கு கட்டுப்படுத்தி தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது. அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பிரியான்ஸ் ஆர்யா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் அந்தப் போட்டியில் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின் – ஜடேஜா ஜோடியை ஆர்யா அபாரமாக எதிர்கொண்டு சதத்தை அடித்ததாக முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து கூறியுள்ளார்.
மேலும் சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன் போல திறமையைக் கொண்ட அவர் இந்தியாவுக்காக வருங்காலங்களில் அறிமுகமாகி நீண்ட காலம் விளையாடுவார் என்றும் சித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் பேசியது பின்வருமாறு. “பிரியான்ஸ் ஆர்யா. என்னுடைய வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் அவர் இந்தியாவுக்காக அதுவும் நீண்ட காலம் விளையாடுவார்”
“சச்சின் டெண்டுல்கருக்கு பின் அவர் ஒரு அதிசயமான இரண்டாவது பேட்ஸ்மேன். நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால்? அவர் 42 பந்துகளில் சதமடித்த சூழ்நிலையைப் பாருங்கள். அவர் எம்மாதிரியான பவுலர்களை எதிர்கொண்டு 250 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார் என்று பாருங்கள். அதாவது ஸ்ரேயாஸ், நேஹல், பிரப்சிம்ரன் போன்ற முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த போது அவர் அசத்தினார்”
இதையும் படிங்க: இதுலயுமா சிஎஸ்கே லேட்? துபே மாதிரி கான்வே ஆடல.. அவருக்கு சிக்ஸர் அடிக்க தெரியாதா? சாவ்லா, கிளார்க் விமர்சனம்
“அவருடைய மணிக்கட்டு அசாருதீன், குண்டப்பா விஸ்வநாத் போல செயல்படுகிறது. பாயிண்ட், கவர்ஸ் திசைக்கு மேலே சிக்சர்களை அடித்த அதே மணிக்கட்டைப் பயன்படுத்தி அவர் மிட் விக்கெட் உட்பட அனைத்து திசைகளிலும் அடித்தார். அதை அவர் பதிரனா, 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த அஸ்வின், ஜடேஜா, நூர் அஹ்மதுக்கு ஆகியோருக்கு எதிராக அடித்தார். அந்த தரமான பவுலர்களை நன்றாக எதிர்கொண்டது மட்டுமின்றி பஞ்சாப்பையும் அவர் வெற்றி பெற வைத்துள்ளார்” என்று கூறினார்.