ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா கோப்பையை வென்ற சாதனை படைத்தது. அடுத்ததாக இந்திய அணி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அது 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் இந்தியா விளையாடும் முதல் தொடராகும்.
எனவே அதில் எப்படியாவது வெற்றி பெற்று 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் பயணத்தை வெற்றிகரமாக துவக்க இந்தியா முயற்சிக்க உள்ளது. ஏனெனில் 2021, 2023 ஆகிய அடுத்தடுத்த ஃபைனல்களுக்கு தகுதி பெற்ற இந்தியா சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது.
சவாலான இங்கிலாந்து:
இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளது பின்னடைவு என்று முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து தெரிவித்துள்ளார். அதை விட டெஸ்ட் அணியில் ஆல் ரவுண்டர்களுக்கு பஞ்சம் இருப்பது மிகப்பெரிய பின்னடைவு என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். எனவே அதை இந்திய அணி சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி சித்து பேசியது பின்வருமாறு. “அடுத்ததாக ஐபிஎல் வர உள்ளது கவலைப்பட வேண்டிய விஷயமாகும். அந்தத் தொடரில் இந்திய வீரர்கள் பெஞ்சில் அமர்ந்திருக்க யாரும் விரும்ப மாட்டார்கள். அதில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே திடீரென இங்கிலாந்து சுற்றுப்பயணம் வந்து விடும். அங்கே சூழ்நிலைகள் வட துருவத்திலிருந்து தென் துருவமாக மாறும்”
இந்தியாவின் பிரச்சனை:
“சூழ்நிலைகள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இம்முறை ஜூன், ஜூலை மாதத்தில் தொடர் துவங்குவதால் இங்கிலாந்தில் புற்கள், ஈரப்பதம் மற்றும் காற்று ஆகியவை அதிகமாக இருக்கும். அது போன்ற சூழ்நிலைகளில் இங்கிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் காயமடைந்த புலியாக இந்தியாவை வீழ்த்த காத்திருப்பார்கள். ஏனெனில் அவர்கள் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்துள்ளனர்”
இதையும் படிங்க: 25 வருடம் 4வது முறையாக அசுரன் ஆஸியை நாக் அவுட் செய்த இந்தியாவின் உ.கோ நாயகன் யுவ்ராஜ்
“வெள்ளைப்பந்து அணியை போல நமது டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டரில் ஆல் ரவுண்டர்கள் இல்லாதது மிகப்பெரிய பிரச்சினையாகும். அங்கே ஜடேஜா, பாண்டியா, அக்சர் பட்டேல் ஒன்றாக இருப்பார்களா? ஜடேஜா மட்டுமே இருப்பார். அவரால் 4 – 5 விக்கெட்டுகளை எடுக்க முடியுமா? முடியாது. எனவே நீங்கள் பும்ரா, ஷமி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் போன்றவர்களை சார்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் யாருக்கும் பேட்டிங் செய்ய தெரியாது என்பது பிரச்சனையாகும். இதை இந்தியா சரி செய்ய வேண்டும்” என்று கூறினார்.