IPL 2023 : இதுக்கு எண்டே இல்லையா? இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நவீன் உல் ஹக் மோதல் – விராட் கோலி உண்மையான பதிலடி

Naveen Ul Haq Fight
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 1ஆம் தேதி நடைபெற்ற 43வது லீக் போட்டி டெஸ்ட் கிரிக்கெட்டைப் போல நடந்தாலும் இறுதியில் காலத்திற்கும் மறக்க முடியாத மல்யுத்த போட்டி போல் முடிந்தது என்றே சொல்லலாம். அந்த போட்டியில் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு வெறும் 126 ரன்கள் குவித்து அதை எட்ட விடாமல் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்படி மிகவும் அலுப்பு தட்டும் வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டை போல நடைபெற்ற அந்த போட்டியின் கடைசி நேரத்தில் ஆப்கானிஸ்தான் இளம் வீரர் நவீன்-உல்-ஹக் வெள்ளை கோட்டுக்கு உள்ளே இருந்தும் முகமது சிராஜ் கோபத்துடன் ரன் அவுட் செய்யும் முயற்சித்தார்.

அதனால் அதிருப்தியடைந்த அவருக்கும் அடுத்த சில பந்துகளில் அருகில் நின்று கொண்டிருந்த விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் உடன் பேட்டிங் செய்த அமித் மிஸ்ரா மற்றும் நடுவர் ஆகியோர் உள்ளே புகுந்து அதை தடுத்தனர். ஆனால் போட்டி முடிந்த பின் வழக்கம் போல இரு அணி வீரர்களும் கை கொடுத்துக் கொண்ட போது மீண்டும் அவர்களிடையே ஏற்பட்ட சண்டையை கிளன் மேக்ஸ்வெல் தடுத்து நிறுத்தினார். அவை அனைத்தையும் விட தனது அணி வீரரை வம்பிழுத்த விராட் கோலியுடன் போட்டியின் முடிவில் லக்னோ அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது ஸ்டைலில் நெஞ்சோடு நெஞ்சாக மோதும் வகையில் போட்ட சண்டையை இரு அணியினரும் தடுத்து நிறுத்தினர்.

- Advertisement -

இன்ஸ்டாகிராமில் மோதல்:
குறிப்பாக 2013இல் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து மோதிய அவர் 10 வருடங்கள் கழித்தும் பகை மாறாமல் லக்னோ அணியின் பயிற்சியாளராக இம்முறை விராட் கோலியுடன் மோதினார். இத்தனைக்கும் ஒரே மாநிலத்தில் பிறந்து இந்தியாவுக்காக விளையாடி ஜாம்பவான்களாக திகழும் அவர்கள் நட்பு பாராட்டாமல் இப்படி மோதிக் கொண்டதால் இப்போட்டியின் 100% சம்பள தொகையையும் ஐபிஎல் நிர்வாகம் அபராதமாக விதித்தது. மொத்தத்தில் ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத சண்டையாக மாறிய இந்த நிகழ்வு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தான் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தேனே தவிர திட்டு வாங்குவதற்காக அல்ல என்று என்று விராட் கோலியுடனான சண்டை பற்றி சக அணி வீரரிடம் நவீன்-உல்-ஹக் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதோடு நிறுத்தாத அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் விராட் கோலியை ஃபாலோ செய்வதை நிறுத்திவிட்டு மறைமுகமாக் கூறியுள்ளது பின்வருமாறு. “உங்களுக்கு தகுதியானதை நீங்கள் பெறுவீர்கள். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கேற்றார் போல் அப்படியே செல்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அதாவது நீங்கள் என்ன தான் ஜாம்பவானாக இருந்தாலும் திட்டினால் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பேன் என்று நவீன்-உல்-ஹக் இன்ஸ்டாகிராமில் விராட் கோலிக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். மறுபுறம் பொதுவாகவே களத்தில் ஆக்ரோசமாக எதிரணியுடன் மோதக்கூடிய விராட் கோலி களத்திற்கு வெளியே நட்புடன் பழகுபவராகவே இருந்து வருகிறார். அந்த நிலையில் இந்த போட்டியில் நடைபெற்ற சண்டை காட்சிகளில் நீங்கள் கேட்டதும் பார்த்ததும் உண்மை இல்லை என்று விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “நாம் கேட்கும் அனைத்தும் உண்மையல்ல. நாம் பார்க்கும் அனைத்தும் உண்மை அல்ல” என்று கூறியுள்ளார். அதாவது களத்தில் அனைவரும் நினைப்பது போல் தாம் வேண்டுமென்று சண்டை போடவில்லை என்பதை விராட் கோலி மறைமுகமாக தெரிவிக்கிறார். இதனால் இந்த இருவரும் மீண்டும் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் சந்திக்கும் போது மோதுவதற்கு வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க:IPL 2023 : தற்போதைய டெல்லி அணியின் பெஸ்ட் பினிஷர்னா அது இவர்தான் – பிரவீன் ஆம்ரே பேட்டி

முன்னதாக இதே போட்டியின் முடிவில் கேஎல் ராகுல் சமாதானப்படுத்தியதால் பகையை மறந்த விராட் கோலி நட்பாக கை நீட்டினார். ஆனால் பேசுவதற்கு எதுவுமில்லை என்று அவருக்கு கை கொடுக்காமல் நவீன்-உல்-ஹக் திமிராக சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement