இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்பொழுது வெளியான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் பும்ரா இடம்பிடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்து தொடர் நீண்டது என்பதால் பும்ராவிற்கு இந்த ஓய்வு வழங்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக மீதம் இருக்கும் 2 டெஸ்ட் போட்டிகளில் பும்ரா ஆடுவார். டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு ஓய்வு கொடுக்க உள்ளோம். நீண்ட போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து விளையாடுவது அவர்களை சோர்வுப்படுத்தும், அதே நேரத்தில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாலும் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய தொடர் தொடங்கி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரை தொடர்ந்து ஆடியுள்ள பும்ரா இதுவரை 180 ஓவர்களுக்கு மேல் வீசியுள்ளார். எனவே அவரது பிட்னெஸை கருத்தில் கொண்டும் உடல் நலத்தை கருத்தில் கொண்டும் அவருக்கு இந்த ஓய்வானது தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்கனவே விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நடராஜன் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியில் சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த தொடரில் நடராஜனின் ஆட்டம் எப்படி இருக்க போகிறது என்று இந்திய கிரிக்கெட் குழு எதிர்பார்ப்பில் உள்ளது.
ஏனெனில் நடராஜனின் ஆட்டத்தை பொறுத்தே அவருக்கு இந்தாண்டு நடக்கயிருக்கும் உலகக் கோப்பை டி20 தொடருக்கான வீரர்கள் பட்டியலில் வாய்ப்பு கிடைக்கும். எனவே ரசிகர்களும் நடராஜன் நன்றாக விளையாடி உலகக் கோப்பை டி20 தொடரில் செலக்ட் ஆகவிட வேண்டுமென எதிர்பார்ப்பில் உள்ளனர்.