இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தொடரில் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான இறுதிப் போட்டி தற்போது பிரிஸ்பன் மைதானத்தில் இன்று 15ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த போட்டியின்போது காயம் ஏற்பட்ட இந்திய வீரர்களான அஸ்வின், விகாரி, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்த போட்டியில் விளையாடவில்லை, இதனால் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்திய அணியில் உள்ள மாற்றங்களை டாஸ் நிகழ்விற்கு பிறகு தெரிவித்த ரஹானே இந்திய அணியில் காயமடைந்த 4 வீரர்களுக்கு பதிலாக அகர்வால், சுந்தர், நடராஜன் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் விளையாடுவார்கள் என்று தெரிவித்தார்.
அதன்படி டாஸ் வென்று இந்த போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் குவித்தது. கேமரோன் கிரீன் 28 ரன்களுடனும், டிம் பெயின் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பாக நடராஜன் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் சுந்தர் மற்றும் தாகூர் ஆகியோர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியில் தமிழக வீரர்களான சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். இதில் நடராஜன் தனது அறிமுக தொப்பியை இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதரிடமிருந்து பெற்றார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளாயாடும் 300 ஆவது இந்திய வீரராகவும் அறிமுகமாகி புதிய மைல்கல்லை படைத்துள்ளார் நடராஜன் என்பது கூடுதல் சிறப்பாகும்.
The stuff dreams are made of. A perfect treble for @Natarajan_91 as he is presented with #TeamIndia‘s Test 🧢 No. 300. It can’t get any better! Natu is now an all-format player. #AUSvIND pic.twitter.com/cLYVBMGfFM
— BCCI (@BCCI) January 14, 2021
இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நடராஜன் அடுத்தடுத்து 2 ஆஸ்திரேலிய வீரர்களை வீழ்த்தி தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.