
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் என சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டு அந்த தொடரின் தொடர் நாயகன் விருதினையும் வென்றிருந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
அதோடு தற்போது 38 வயதாகும் ரோஹித் சர்மா அண்மையில் வெளியான ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அதிரடியாக விளையாடி வரும் ரோகித் சர்மா தற்போது நம்பர் 1 பேட்டராக மாறியுள்ளது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் ஹுசேனும் தற்போது ரோகித் சர்மா முதலிடத்திற்கு வந்தது குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
ரோகித் சர்மா நம்பர் 1 இடத்தை பிடித்து விட்டார் என்று கூறியதும் என் மனதில் ஓடிய கேள்வி ஒன்றுதான். அதாவது இத்தனை ஆண்டுகளாக அவர் முதலிடத்தினை பிடித்தது இல்லையா? என்பதுதான். ஏனெனில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக விளையாடி வரும் அவர் மூன்று முறை இரட்டை சதம் அடித்திருக்கிறார். ஏகப்பட்ட முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதனால் இதற்கு முன்னதாகவே முதலிடத்தை பிடித்திருப்பார் என்று நினைத்து இருந்தேன். ஆனால் பலரும் இதுதான் ரோஹித் சர்மா முதலிடத்தினை பிடிப்பது முதல் முறை என்று கூறினார்கள். இந்த விடயம் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும் ரோகித் சர்மாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இதையும் படிங்க : கே.கே.ஆர் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் அறிவிப்பு.. அதுவும் யார் தெரியுமா? – அடுத்த கப் ரெடியா?
அவருக்கு நம்பர் 1 பேட்டராக வர அனைத்து தகுதிகளும் இருப்பதாக நினைக்கிறேன். ஒருநாள் போட்டிகளில் அடித்தால் சதம் அல்லது இரட்டை சதம் தான் என்று அடித்து நொறுக்கும் அவர் சுயநலமின்றி விளையாடி வருவது இந்திய அணிக்கும் நல்லது என நாசர் ஹுசேன் கூறியது குறிப்பிடத்தக்கது.