ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி அந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வர இருக்கிறது. அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி துவங்குகறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. முதல் இரண்டு போட்டியும் சென்னையில் நடைபெற அடுத்த இரண்டு போட்டியும் அகமதாபாத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான நாசர் உசேன் இந்த இந்திய அணிக்கு எதிரான தொடர் குறித்து தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய மண்ணில் அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகும் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் அந்த தொடரை வென்றது.
அணியின் கேப்டன் கோலி அணியில் இல்லை மேலும் அனுபவம் வீரர்களுக்கு தொடர்ச்சியான காயம் என பல தடைகளை கடந்து இந்திய அணியின் இளம் படை அதனை வென்று காட்டியது. இந்திய அணி தற்போது வலிமைமிக்க ஒரு அணியாக மாறியுள்ளது. இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார். மேலும் இந்திய அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பேர்ஸ்டோக்கு ஓய்வு அளித்திருக்க கூடாது என்று தனது கருத்தினை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்தியா போன்ற வலிமையான அணிக்கு எதிராக சுழற்பந்து வீச்சில் சிறப்பாக ஆடும் பேர்ஸ்டோக்கு ஓய்வு கொடுத்தது தவறு. ஏனெனில் இங்கிலாந்து அணியில் ரூட், ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ ஆகிய மூவரும்தான் சுழற்பந்துவீச்சை எதிர்த்து சிறப்பாக விளையாட கூடியவர்கள் அதிலும் ஒருவருக்கு ஓய்கொடுத்தல் தவறானது. வீரர்கள் தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடி வருவதால் ஓய்வு கொடுப்பது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் முக்கியமான தொடரில் இவருக்கு ஓய்வு அளிக்காமல் மற்றொரு நேரத்தில் சுழற்சி முறையில் ஓய்வளித்து இருக்கலாம் அதை தவிர்த்து இந்திய அணிக்கு எதிரான இந்த முக்கிய தொடரில் அவருக்கு ஓய்வை வழங்கியது மிகப்பெரிய தவறு என்று நாசர் ஹுசேன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது