- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆமா மறுபடியும் சொல்றேன் தடவும் இந்தியாவிடம் தைரியம் இல்ல, முன்னாள் வீரருக்கு நாசர் ஹுசைன் பதிலடி – விவரம் என்ன

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 15 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் சொதப்பி வெளியேறியது. இத்தனைக்கும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக அதிகப்படியான அழுத்தம் கொண்ட ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்ட உலகத்தரம் வாய்ந்த வீரர்களைக் கொண்டிருந்தும் ஒரு அழுத்தமான நாக் அவுட் போட்டியை சமாளித்து பைனலுக்கு கூட தகுதி பெற முடியவில்லை என்பது இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காத இந்தியா கொஞ்சமும் போராடாமல் தோற்றது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. மறுபுறம் இந்திய பவுலர்களை லோக்கல் பவுலர்களாக அடித்து நொறுக்கிய இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்று ஒரே நேரத்தில் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைகளை வென்ற முதல் அணியாக கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்தது. ஆரம்பத்தில் ரொம்பவே தடுமாறினாலும் 2017இல் இயன் மோர்கன் வருகைக்கு பின் அதிரடியான அணுகுமுறையை பின்பற்றி மிரட்டும் இங்கிலாந்து தற்சமயத்தில் உலக அளவில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இதர அணிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

- Advertisement -

ஆமாம் தைரியம் இல்ல:
அதன் காரணமாக அந்த அணியின் அணுகு முறையை இந்தியாவும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. குறிப்பாக இருதரப்பு தொடர்களில் அதிரடி காட்டும் இந்தியா உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளில் தடுமாறுவதற்கு பயமே காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் கூறினார். அத்துடன் நாக் அவுட் சுற்றில் வெற்றி வாகை சூடுவதற்கு இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கடைப்பிடித்த அணுகு முறையை பின்பற்றி ஐபிஎல் தொடரில் விளையாடுவது போல் தடவாமல் அதிரடி காட்ட வேண்டும் என்றும் அவர் வெளிப்படையாக பேசினார்.

இந்நிலையில் ரோகித் சர்மா போன்ற ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் தங்களது இடத்தை இழந்து விடுவோம் என்ற பயத்தில் தடுமாறுகிறார்களா என்று நாசர் ஹுசைனிடம் மற்றொரு முன்னாள் கேப்டன் மைக்கேல் அத்தர்டென் கேளிவி எழுப்பினார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து கிரிக்கெட்டில் இயன் மோர்கன் தாக்கத்தைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். அதை செய்வதில் இந்தியாவுக்கு 2 வகையில் கடினமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா”

- Advertisement -

“ஒன்று அவர்கள் வைத்திருக்கும் கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கையால் போட்டி அதிகமாக உள்ளதா? அதாவது ஒருவர் சுமாராக செயல்பட்டால் தங்களுடைய இடத்துக்கு மற்றொரு வீரர் வந்து விடுவார்கள் என்ற பயத்தில் அவர்கள் தடுமாறுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா. மேலும் பிசிசிஐ கொடுக்கும் சம்பளத்தை விட விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல் ஆகியோர் ஸ்பான்சர்ஷிப் வாயிலாக அதிக பணத்தை சம்பாதிக்கிறார்கள் அது இங்கிலாந்து விட அதிகமானது. எனவே இந்த இரண்டு காரணிகளும் இந்தியாவை மிகவும் கடினமாக்குவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நாசர் ஹுசைன் ரோகித் சர்மா போன்ற 3 இரட்டை சதங்கள் அடித்த அதே இந்திய அணியில் தான் அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்தில் ராகுல் போன்ற வீரர்களும் விளையாடுவதாக மீண்டும் பதிலடி கொடுத்து பேசியது பின்வருமாறு. “அனேகமாக நீங்கள் நான் சொன்னதை மிகவும் சிக்கலாகுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்தியாவிடம் நம்ப முடியாத கிரிக்கெட் வீரர்கள் இல்லாவிட்டால் நான் கவலைப்பட மாட்டேன். மேலும் ஒருவரது இடத்திற்காக இருக்கையின் நுனியில் காத்திருக்கும் மற்றொருவரை பற்றி நான் பேசவில்லை”

“ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை அடித்த ரோகித் சர்மாவை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். ஆம் அவரால் எதிரணியை அடித்து நொறுக்க முடியும். அதே போல் கேஎல் ராகுலை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். அவர் பேட்டிங் செய்வதை பார்த்தால் பயத்துடன் விளையாடுவது தெளிவாக தெரியும்” என்று கூறினார். அதாவது திறமை இருந்தும் இந்திய வீரர்கள் பயத்தில் விளையாடுவதே நாக் அவுட் போட்டிகளில் தடுமாறுவதற்கு காரணம் என்று மீண்டும் நாசர் ஹுசைன் உறுதியாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -