
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒரு டி20 போட்டியில் விளையாடியது. 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலிஸ்டான தென்னாப்பிரிக்கா சர்வதேச கிரிக்கெட்டில் வலுவான அணியாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட தென்னாப்பிரிக்கா இப்போட்டியில் கத்துக்குட்டியான நமீபியாவை எளிதாக தோற்கடிக்கும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது.
அந்த சூழ்நிலையில் அப்போட்டி அக்டோபர் 11ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு துவங்கியது. நமீபியாவில் இருக்கும் வின்தோக் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு நட்சத்திர வீரர் குயிண்டன் டீ காக் 1 (4) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
அடுத்து வந்த ரிசா ஹென்றிக்ஸ் தடுமாறி 7 (9) ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதனால் 25/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்து வந்து அதிரடி காட்ட முயற்சித்த ரூபின் ஹெர்மன் 23 (18) ரன்களில் அவுட்டானார். மறுபுறம் நங்கூரமாக விளையாடி வந்த மற்றொரு துவக்க வீரர் டிரே பிரிட்டோரியஸ் 22 (22) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
போதாகுறைக்கு அடுத்து வந்த கேப்டன் டோனவன் பெரிரா 4 (2) ரன்களில் அவுட்டானதால் 68/5 என மீண்டும் தென்னாபிரிக்கா திணறியது. அப்போது நிதானமாக விளையாடிய ஸ்மித் 31 (30) ரன்களில் அவுட்டானார். இறுதியில் லோயர் ஆர்டரில் சிம்லேன் 11 (8), போர்ச்சுன் 19* (21), ஜெரால்ட் கோட்சி 12 (6) ரன்கள் எடுத்ததால் ஓரளவு தப்பிய தென்னாப்பிரிக்கா 20 ஓவரில் 134/8 ரன்கள் எடுத்தது.
நமீபியாவுக்கு அதிகபட்சமாக ட்ரப்பல்மேன் 3, மேக்ஸ் ஹெயிங்கோ 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய நமீபியா அணிக்கு டாப் ஆர்டரில் லோரன் 13, ஜென் பிரைலிங்க் 7, ஜென் நிக்கோல் 7 ரன்களில் அவுட்டானார்கள். மிடில் ஆடரில் கேப்டன் எராஸ்மஸ் 21 (21), ஜேஜே ஸ்மித் 13, மாலன் க்ருகர் 18 ரன்கள் எடுத்தனர். லோயர் ஆர்டரில் ஜென் க்ரீன் 30* (23), ட்ரம்பல்மேன் 11* (8) ரன்கள் அடித்து அசத்தினார்கள்.
இதையும் படிங்க: சேவாக்கின் ஆல் டைம் ரெக்கார்டை சச்சின், கோலி மாதிரி திறமையான ஜெய்ஸ்வால் தான் உடைப்பாரு.. கைப் கணிப்பு
குறிப்பாக கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட போது க்ரீன் பௌண்டரி அடித்ததால் 20 ஓவரில் 138/6 ரன்கள் எடுத்த நமீபியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த நமீபியா வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக நன்ரே பர்கர் 2, சிம்லேன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் நமீபியாவிடம் அவமானத் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.