இந்தியாவின் பல்வேறு நகரங்களில் புகழ்பெற்ற ரஞ்சிக் கோப்பையின் 2024 சீசன் நடைபெற்று வருகிறது. அதில் ஜனவரி 26ஆம் தேதி கோயம்புத்தூரில் இருக்கும் எஸ்என்ஆர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய எலைட் குரூப் சி பிரிவின் லீக் போட்டியில் சண்டிகர் மற்றும் தமிழ்நாடு அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஆனால் ஆரம்பம் முதலே தமிழ்நாட்டு பவுலர்களின் சிறப்பான பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாத அந்த அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் வெறும் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சண்டிகர் அணிக்கு அதிகபட்சமாக குணால் மகாஜன் 28, ஹர்னூர் சிங் 18 ரன்கள் எடுத்த நிலையில் தமிழகம் சார்பில் அதிகபட்சமாக சந்திப் வாரியர் 3, சாய் கிஷோர் 3, அஜித் ராம் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அசத்திய ஜெகதீசன்:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழக அணிக்கு ஆரம்பத்திலேயே பி சச்சின் 16 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் நாராயன் ஜெகதீசன் அடுத்ததாக வந்த ரஞ்சன் பிரதோஷ் பாலுடன் சேர்ந்து நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டார். அந்த வகையில் 60 ஓவர்கள் வரை பேட்டிங் செய்த இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது பிரதோஷ்பால் சதமடித்து 105 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவருடன் விளையாடிய நாராயணன் ஜெகதீசனும் சதமடித்து அசத்திய நிலையில் அடுத்ததாக வந்த பாபா இந்திரஜித் தன்னுடைய பங்கிற்கு கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தார். அந்த வகையில் 3வது விக்கெட்டுக்கு 280 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் போட்டு தமிழ்நாடு 500 ரன்கள் தாண்ட உதவிய இந்த ஜோடியில் பாபா இந்திரஜித் சதமடித்து 11 பவுண்டரியுடன் 123 (144) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய நாராயண ஜெகதீசன் இரட்டை சதமடித்தும் ஓயாமல் நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி சண்டிகர் பவுலர்களை வெளுத்து வாங்கினார். அதே வேகத்தில் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 23 பவுண்டரி 5 சிக்சருடன் முச்சதம் அடித்து ஒருவழியாக 321 (403) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடைய சிறப்பான ஆட்டத்தால் 610/4 ரன்கள் எடுத்திருந்த போது தமிழ்நாடு தங்களுடைய முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
இதையும் படிங்க: முக்கிய வீரரின் பாதத்தை உடைத்த ஸ்டார்க்.. மடக்கி பிடித்த ஆஸி.. அற்புதமான வாய்ப்பை தவற விடும் வெ.இ?
மொத்தத்தில் தமிழ்நாடு அடித்து 610 ரன்களில் ஜெகதீசன் மட்டும் பாதிக்கும் மேற்பட்ட ரன்களை அடித்து வலுவான துவக்கத்தை பெற உதவினார். சண்டிகர் சார்பில் அதிகபட்சமாக அர்பிட் பானு 2 விக்கெட்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 499 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் விளையாடி வரும் சண்டிகர் 2வது நாள் முடிவில் 1/0 ரன் எடுத்து விளையாடி வருகிறது.