TNPL 2022 : முதல் போட்டியிலேயே வெடித்த மன்கட் சர்ச்சை, முகம் சுளிக்க வைத்த தமிழக வீரர்கள் – ரசிகர்கள் அதிருப்தி

TNPL Mankad Super Over
- Advertisement -

ஐபிஎல் தொடரை போல 2016 முதல் தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு வாய்ப்பளித்து உலக கிரிக்கெட் அரங்கில் அடையாளம் காண்பிக்க வைக்கும் ஒரு தொடராக பார்க்கப்படும் இந்த டிஎன்பிஎல் தொடரின் 6-வது சீசன் ஜூன் 23-ஆம் தேதியன்று திருநெல்வேலியில் துவங்கியது. மொத்தம் 8 அணிகள் 32 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும் இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.

நேற்று இரவு 7.15 மணிக்கு துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நெல்லைக்கு ப்ரதோஸ் பால் 7, பாபா அபராஜித் 2, பாபா இந்திரஜித் 3 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்ததால் 27/3 என ஆரம்பத்திலேயே அந்த அணி தடுமாறியது.

- Advertisement -

அந்த இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த சூரிய பிரகாஷ் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோர் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாக ரன்களை குவித்தனர். 6-வது ஓவரில் ஜோடி சேர்ந்து 18-வது ஓவர் வரை சேப்பாக் பவுலர்களை வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 133 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை காப்பாற்றியது.

மன்கட் சர்ச்சை:
அதில் 8 பவுண்டரியுடன் கடைசி நேரத்தில் சூரிய பிரகாஷ் 62 (50) ரன்களில் அவுட்டானாலும் 5 பவுண்டரி 6 சிக்சர்கள் பறக்கவிட்ட சஞ்சய் யாதவ் கடைசி வரை அவுட்டாகாமல் 87* (48) ரன்களை தெறிக்கவிட்டார். அவருடன் அஜிடேஷ் 16* (8) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் நெல்லை 184/4 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து 185 என்ற இலக்கை துரத்திய சேப்பாக்கம் 3.3 ஓவரில் 35/0 என்று அதிரடியான தொடக்கத்துடன் சேசிங்கை துவக்கியது.

- Advertisement -

அப்போது 4-வது ஓவரை வீசிக்கொண்டிருந்த பாபா அபராஜித் அதை எதிர்கொண்ட கவுசிக் காந்திக்கு எதிராக 4-வது பந்தை வீசவந்த போது எதிர்ப்புறம் இருந்த மற்றொரு பேட்ஸ்மேன் ஜெகதீசன் கிரீஸ் எனப்படும் வெள்ளைக்கோட்டை ஒருசில இன்ச்கள் தாண்டியதைப் பார்த்ததால் உடனடியாக மன்கட் முறையில் ரன் அவுட் செய்ததால் போட்டியில் மிகப் பெரிய சர்ச்சை வெடித்தது.

முகம் சுளிக்கும் நிலை:
கடந்த 2019இல் பட்லரை அஸ்வின் இந்த வகையில் ரன் அவுட் செய்தது உலக அளவில் மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில் அதில் எந்த தவறுமில்லை என்று அறிவித்த எம்சிசி அது ரன் அவுட் என்று சமீபத்தில் அடிப்படை விதிமுறையில் மாற்றம் செய்திருந்தது. அதனால் விதிமுறைக்கு உட்பட்டு அம்பயர் அவுட் வழங்கினார். அதனால் ஆத்திரமடைந்த ஜெகதீசன் பாபா அபாரஜித்துக்கு தனது நடுவிரலை காட்டியது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

ஒருமுறை மட்டும் அல்லாமல் பெவிலியன் திரும்பும் வரை 2 – 3 முறை பொதுமக்களும் ரசிகர்களும் பார்க்கும் கேமராவில் அவ்வாறு காட்டிக்கொண்டே அவர் சென்றதை பார்த்த அத்தனை பேரையும் முகம் சுளிக்க வைத்தது. தமிழகத்திற்காக ஒரே அணியில் இணைந்து விளையாடும் இவர்களில் அபாரஜித் அவ்வாறு அவுட் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் அவர் விதிமுறைக்கு உட்பட்டே செயல்பட்டார். அதற்காக நடுவிரலை 3 முறை காட்டிய ஜெகதீசன் ஜென்டில்மேனாக நடந்து கொள்ளவில்லை. மொத்தத்தில் இந்த 2 தமிழக வீரர்களால் நேற்றைய போட்டியில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது.

சூப்பர் ஓவர்:
அதை தொடர்ந்து ராதாகிருஷ்ணன் 1 (4) சசி தேவ் 15 (16) ராஜகோபால் சதீஷ் 5 (6) என அடுத்து வந்த பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்த நிலையில் மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த கௌசிக் காந்தி 7 பவுண்டரி 2 சிக்சருடன் 64 (43) ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடி ஆட்டமிழந்தார். ஆனால் கடைசி நேரத்தில் சோனு யாதவும் 3 சிக்சருடன் 34 (23) ரன்களும் ஹரிஷ் குமார் 26* (12) ரன்களும் பறக்க விட்டதால் 20 ஓவர்களில் சேப்பாக்கம் அணியும் மிகச்சரியாக 184/7 ரன்கள் எடுத்ததால் போட்டி டையில் முடிந்தது.

அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் 9 ரன்கள் எடுத்தது. அதை துரத்திய நெல்லைக்கு மீண்டும் சஞ்சய் யாதவ் 7 ரன்களும், 2 ஒய்ட், அஜிடேஷ் 1 ரன் எடுத்ததால் 5-வது பந்திலேயே வென்ற அந்த அணி முதல் போட்டியிலேயே திரில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அந்த அணியின் வெற்றிக்கு 87* ரன்கள், சூப்பர் ஓவரில் 7 ரன்கள், 2 விக்கெட்டுகள் எடுத்த சஞ்சய் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Advertisement