அண்மையில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
சச்சினின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு :
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது வரும் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. பாகிஸ்தான் மண்ணில் வெற்றி பெற்ற அதே உத்வேகத்துடன் வங்கதேச அணி இந்திய தொடரை எதிர்கொள்ள உள்ளதால் இந்திய அணிக்கு எதிராகவும் சிறப்பான செயற்பாட்டை வெளிப்படுத்த முயற்சிக்கும்.
அதே வேளையில் இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இந்திய அணி இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் வங்கதேச அணியிடம் தோற்றதே கிடையாது. இதுவரை இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கின்றன.
இந்நிலையில் இம்முறை இந்தியா வரும் வங்கதேச அணியில் அந்த அணியின் அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹீம் சச்சின் டெண்டுல்கர் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் இதுவரை இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இருதரப்பு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். 7 போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சச்சின் வங்கதேச அணிக்கு எதிராக 5 சதங்களுடன் 820 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா செல்வதை ஆஸியால் தடுக்க முடியாது.. ஆகாஷ் சோப்ரா பேட்டி
அவருக்கு அடுத்து முஷ்பிகுர் ரஹீம் 8 போட்டிகளில் விளையாடி 604 ரன்கள் அடித்துள்ளார். இந்நிலையில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணியில் இடம் பெற்றுள்ள ரஹீம் இந்த தொடரில் நான்கு இன்னிங்ஸ்களில் விளையாடி 217 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு அவருக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.



