
மும்பையை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் தம்பி முஷீர் கான் சமீப காலங்களில் அசத்தலாக விளையாடி வருகிறார். குறிப்பாக 2024 அண்டர்-19 உலக கோப்பையில் 300க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த அவர் இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் ரஞ்சிக் கோப்பையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் ஃபைனலில் சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்று மும்பை சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
அதன் காரணமாக 2024 துலீப் கோப்பையில் முஷீர் கான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வாய்ப்பிலும் முதல் ரவுண்டில் சதமடித்த அவர் தனது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். அதன் காரணமாக அடுத்ததாக நடைபெறும் 2024 இராணி கோப்பையில் மும்பை அணிக்காக விளையாட அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் முஷீர் கான் இன்று காரில் தம்முடைய தந்தையுடன் பயணம் செய்து கொண்டிருக்கும் போது லக்னோவில் விபத்தை சந்தித்துள்ளார். அதனால் அவரும் அவருடைய தந்தையும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக முஷீர் கான் கழுத்து பகுதியில் காயத்தை சந்தித்ததாக தெரிய வந்துள்ளது.
தற்போது அதை உறுதி செய்யும் வண்ணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் முஷீர் கான் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் சோகமடைந்துள்ள ரசிகர்கள் முஷீர் கான் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் பிரார்த்தனை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த வருடம் தான் இந்திய வீரர் ரிசப் பண்ட் இதே போல மோசமான கார் விபத்தில் சிக்கினார். இருப்பினும் அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் சுமார் 2 வருடங்கள் கழித்து மீண்டும் விளையாடத் துவங்கியுள்ளார். அந்த சூழ்நிலையில் முஷீர் கான் அதே போன்ற சூழ்நிலையை சந்தித்துள்ளது இந்திய ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆகாஷ் தீப் திறமைசாலி தான்.. ஆனாலும் அவர் இந்த விடயத்தை அவர் நிரூபிச்சாகனும் – தினேஷ் கார்த்திக்
இந்த நிலையில் இராணி கோப்பை வரும் அக்டோபர் முதல் வாரம் துவங்க உள்ளது. தற்போது காயத்தை சந்தித்துள்ளதால் முசீர் கான் அதிலிருந்து விலக உள்ளதாக புதிய தகவல்கள் காணப்படுகின்றன. அதே போல 2024 ரஞ்சிக் கோப்பையில் ரவுண்டிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என்று தெரிய வருவது குறிப்பிடத்தக்கது.