TNPL 2022 : தெறிக்கவிட்ட முரளி விஜய் போராட்டம் வீண் – ரன்மழை பொழிந்த நெல்லை அபார வெற்றி, முழுவிவரம்

SAnjay Yadhav Murali Vijay TNPL
- Advertisement -

தமிழகத்தின் தரமான இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காட்டும் கிரிக்கெட் தொடரான தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடரின் 6-வது சீசன் கடந்த ஜூன் 23-ஆம் தேதியன்று கோலாகலமாகத் துவங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணியுடன் தலா 1 முறை லீக் சுற்றில் மோத வேண்டும் என்பதன் அடிப்படையில் தற்போது நடைபெற்று வரும் 28 லீக் போட்டிகள் கொண்ட லீக் சுற்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக ஜூலை 15-ஆம் தேதியான நேற்று கோயம்புத்தூரில் நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. இரவு 7.15 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய நெல்லைக்கு நிரஞ்சன் 5 (9) சூரிய பிரகாஷ் 18 (11) என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

- Advertisement -

அதனால் 29/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற நெல்லைக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த பாபா அபராஜித் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோர் மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் நிதானமாகவும் அதிரடியாக ரன்களை சேர்த்தனர். பவர்பிளே முடிந்ததும் அதிரடியை குறைக்காமல் இரு மடங்கு வேகமாக ரன்கள் சேர்க்கும் வகையில் திருச்சி பவுலர்களை வெளுத்து வாங்கிய இவர்கள் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்டு ஓவர்களுக்கு 10 ரன்களுக்கு மேல் குவித்தனர்.

நெல்லையின் ரன்மழை:
ஒரு கட்டத்தில் 10 ஓவர்கள் கடந்தும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அதிரடியை குறைக்காத இவர்கள் திருச்சி பவுலர்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு மிரட்டலாக பேட்டிங் செய்து அதிரடியான சிக்சர்களை பறக்கவிட்டு மைதானத்துக்கு வந்த ரசிகர்களை ரன் மழையால் நனைத்தார்கள். இந்த ஜோடியை பிரிப்பதற்கு திருச்சி போட்ட அத்தனை திட்டங்களையும் தவிடுபொடியாக்கிய இந்த ஜோடி சிம்ம சொப்பனமாக மாறி கடைசி வரை அவுட்டே ஆகாமல் 3-வது விக்கெட்டுக்கு 207 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டியது.

- Advertisement -

இதன் வாயிலாக டிஎன்பிஎல் கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிகபட்ச ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சாதனையையும் இவர்கள் படைத்தனர். அதனால் 20 ஓவர்களில் நெல்லை 236/2 ரன்கள் சேர்த்து அசத்தியது. அதில் 5 பவுண்டரி 8 சிக்சருடன் பாபா அபரஜித் 92* (48) ரன்கள் எடுக்க மறுபுறம் அற்புதமாக பேட்டிங் செய்த சஞ்சய் யாதவ் 6 பவுண்டரி 9 மெகா சிக்ஸர்களை பறக்கவிட்டு சதமடித்து 103* (55) ரன்கள் விளாசினார்.

சரமாரியான அடி வாங்கிய திருச்சி சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சரவணகுமார் மற்றும் ரஹீல் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். அதை தொடர்ந்து 237 என்ற இமாலய இலக்கை துரத்திய திருச்சிக்கு நட்சத்திர அனுபவ தொடக்க வீரர் முரளி விஜய் மற்றும் சந்தோஷ் ஷிவ் ஆகியோர் 50 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

- Advertisement -

பழைய பன்னீர்செல்வம்:
அதில் ஒருபுறம் பெயருக்காக விளையாடிய சந்தோஷ் 9 (10) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த அமித் சாத்விக் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 69/2 என தடுமாறிய திருச்சிக்கு மறுபுறம் அதிரடியை கைவிடாமல் தொடர்ந்து பட்டையை கிளப்பிய முரளி விஜய் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்டார். ஆனால் அவருக்கு கை கொடுக்காத வகையில் எதிர்புறம் வந்த நிதிஷ் ராஜகோபால் 1 (4) ஆதித்யா கணேஷ் 13 (12) அண்டனி தாஸ் 1 (6) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் வந்த வாக்கிலேயே நெல்லையின் தரமான பந்து வீச்சில் அவுட்டாகி சென்றார்கள்.

அதனால் 108/5 என சறுக்கிய திருச்சியின் தோல்வி உறுதியானாலும் ஐபிஎல் தொடரில் ஏராளமான போட்டிகளில் வெளுத்து வாங்கிய அந்த பழைய முரளி விஜய் பழைய பன்னீர் செல்வத்தை போல மறுபுறம் அதிரடியாக சரவெடியாக பேட்டிங் செய்து 7 பவுண்டரிகளையும் 12 மெகா சிக்ஸர்களையும் பறக்க விட்டு சதம் விளாசி 121 (66) ரன்கள் குவித்து முழு மூச்சுடன் வெற்றிக்காகப் போராடி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். தனி ஒருவனாக போராடிய அவருக்கு இதர பேட்ஸ்மேன்கள் கைகொடுத்த தவறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 170/7 ரன்கள் மட்டுமே எடுத்த திருச்சி 66 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது.

மெகா வெற்றியை சுவைத்த நெல்லையின் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பாபா அபராஜித் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றிக்கு அட்டகாசமாக பேட்டிங் செய்து சதமடித்த சஞ்சய் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த அற்புதமான வெற்றியால் பங்கேற்ற 6 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று முரட்டுத்தனமான அணியாக வலம்வரும் நெல்லை புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஜொலிக்கிறது. மறுபுறம் பங்கேற்ற 5 போட்டிகளில் 4 தோல்விகளை சந்தித்துள்ள திருச்சி 7-வது இடத்தில் தவிப்பதால் லீக் சுற்றுடன் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement