கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஏப்ரல் மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய ரசிகர்கள் இந்தியாவில் கிரிக்கெட் போட்டி எப்போது நடைபெறும் என்று ஆவலுடன் காத்திருந்தபோது 2021 பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
தற்போது இதற்கு முன்னர் சையது முஷ்டாக் அலி டி20 தொடர் வருகின்ற ஜனவரி 10 முதல் 31 வரை பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தொடரில் 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொள்ளும் என்று கூறப்படுகிறது. இந்த தொடர் 2021 ஐபிஎல் தொடருக்கு முன் நடைபெறுவது, இளம் வீரர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த டி20 தொடருக்காக ஒவ்வொரு அணிகளும் தங்களது வீரர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்களும் விளையாட இருக்கின்றனர். உத்திர பிரதேஷ் அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னாவும், கேரளா அணிக்காக ஸ்ரீசாந்தும், ஆந்திரப்பிரதேச அணிக்காக அம்பத்தி ராயுடு மற்றும் பஞ்சாப் அணி சார்பாக யுவராஜ் சிங்கும் விளையாடுகின்றனர். மேலும் டெல்லி அணிக்காக தவான் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் விளையாடுகின்றனர். அதேபோன்று பல்வேறு மாநில அணிக்காகவும் பல இந்திய வீரர்கள் விளையாட இருப்பதால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தற்போது 26 வீரர்களை கொண்ட தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தமிழ்நாடு அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். முரளி விஜய், பாபா அபரஜித், விஜய் சங்கர், ஷாருக்கான், சாய் கிஷோர், முருகன் அஷ்வின், சித்தார்ட்,சந்தீப் வாரியர், ஹரீஷ் குமார், கே விக்னேஷ், சிலம்பரசன் ஆகியோரும் தமிழ்நாடு அணியில் இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,சையத் முஷ்டாக் அலி தொடரிலிருந்து முரளி விஜய் தனது சொந்த காரணத்திற்கான விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முரளி விஜய்க்குப் பதிலாக எல் சூர்யபிரகாஷ் தமிழ்நாடு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றொரு வீரரான கே. விக்னேஷ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக ஜெகநாத் ஸ்ரீனிவாஸ் தமிழ்நாடு அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.