முரட்டு பேட்டிங், மாஸ் பவுலிங் ! 94 வருட உலகசாதனையை தூளாக்கிய மும்பை ரஞ்சி டீம், முழு விவரம்

Mumbai Ranji Team
Photo - BCCI
- Advertisement -

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசன் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வருடம் இந்த தொடர் 2 பகுதிகளாக நடைபெற்ற நிலையில் முதலாவதாக ஐபிஎல் 2022 தொடருக்கு முன்பாக அதாவது கடந்த பிப்ரவரி – மார்ச் மாதங்களில் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் விஜய் சங்கர் தலைமையிலான தமிழகம் சுமாராக செயல்பட்டு நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இருப்பினும் பெங்கால், ஜார்கண்ட், மும்பை, உத்தரகாண்ட், கர்நாடகா, உத்தர பிரதேஷ், பஞ்சாப், மத்திய பிரதேஷ் ஆகிய அணிகள் லீக் சுற்றில் அசத்தலாக செயல்பட்டு காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

அதை தொடர்ந்து இந்த ரஞ்சி கோப்பையின் அரையிறுதி சுற்றில் விளையாடப் போகும் அணிகளை தீர்மானிக்கும் முக்கியமான காலிறுதி போட்டிகள் ஜூன் 6-ஆம் தேதியன்று அழுர், பெங்களூரு ஆகிய நகரங்களில் துவங்கின. அதில் அழுர் நகரில் நடைபெற்ற 2-வது காலிறுதி போட்டியில் மும்பை மற்றும் உத்தரகாண்ட் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

- Advertisement -

முரட்டு பேட்டிங்:
அந்த போட்டியில் 41 முறை ரஞ்சி கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று வெற்றிகரமான அணியாக சரித்திரம் படைத்துள்ள மும்பை ஆரம்பத்திலேயே கிடைத்த டாஸ் அதிர்ஷ்டத்தால் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் நட்சத்திரம் மற்றும் கேப்டன் பிரிதிவி ஷா 21 ரன்களில் அவுட்டாக மற்றொரு இளம் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதனால் 64/2 என சுமாரான தொடக்கம் பெற்ற அந்த அணிக்கு அடுத்து ஜோடி சேர்ந்த அர்மான் ஜாபர் மற்றும் சுவேட் பார்க்கர் ஆகியோர் 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தனர். அதில் அர்மன் ஜாபர் 60 ரன்களில் அவுட்டானாலும் அடுத்ததாக வந்த சர்பராஸ் கான் தனது பங்கிற்கு 14 பவுண்டரி 4 சிக்சர்கள் சதமடித்து 153 ரன்கள் விளாசினார். இடையில் சாம்ஸ் முலானி 59, டானுஷ் கொடின் 28, துஷார் தேஷ்பாண்டே 20* ரன்கள் எடுத்தனர். மறுபுறம் நிதானமாக பேட்டிங் செய்த சுவேட் பார்க்கர் சதம் அடித்தும் உத்தரகாண்ட் பவுலர்களை வெளுத்து வாங்கி 21 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 252 ரன்கள் குவித்த போது ரன் அவுட்டானார். அப்போது 647/8 ரன்கள் எடுத்த மும்பை தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

மாஸ் பவுலிங்:
அதனால் பந்துவீச்சில் ஏற்கனவே மனதளவில் உடைந்த உத்தரகாண்ட் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய போது மிரட்டலாக பந்துவீசிய மும்பைக்கு எதிராக பேட்டிங்கிலும் பதில் சொல்ல முடியாத அந்த அணி 114 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கமல் சிங் 40 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக சம்ஸ் முலானி 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 533 என்ற மிகப்பெரிய ரன்களை முன்னிலை பெற்ற மும்பை பாலோ-ஆன் கொடுக்காமல் மீண்டும் பேட்டிங் செய்து உத்தரகாண்ட் பவுலர்களை சரமாரியாக அடித்தது. குறிப்பாக அந்த அணியின் கேப்டன் பிரிதிவி ஷா 72 ரன்கள் எடுத்து அவுட்டாக அவருடன் அசத்தலாக பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் சதமடித்து 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவர்களுடன் ஆதித்யா தாரே தனது பங்கிற்கு 57 (56) ரன்கள் எடுக்க 261/3 ரன்கள் எடுத்திருந்தபோது மும்பை தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அதனால் 794 என்ற இமாலய இலக்கை துரத்திய உத்தரகாண்ட் மும்பையின் மாஸ் பவுலிங்கில் ஈடுகொடுக்க முடியாமல் முதல் இன்னிங்சை விட படு மோசமாக பேட்டிங் செய்து வெறும் 69 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் 5 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக ஷிவம் கரானா 25* (35) ரன்கள் எடுத்தார். மும்பை சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய தவால் குல்கர்னி, சாம்ஸ் முலானி, டானுஷ் கொடின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

உலகசாதனை வெற்றி:
அதனால் 725 ரன்கள் வித்தியாசத்தில் இருமடங்கு பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்த மும்பை 42-வது ரஞ்சிக் கோப்பையை வெல்வதற்காக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது. அதைவிட 725 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ள அந்த அணியை பார்த்து ரசிகர்கள் அசந்து போகிறார்கள் என்றே கூறலாம். இதன் வாயிலாக ரஞ்சி கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற சாதனையை மும்பை படைத்தது.

அதைவிட ஒட்டுமொத்த உலக அளவில் நடைபெற்ற முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் அணி படைத்த சாதனையை 94 வருடங்கள் கழித்து தூள் தூளாக்கிய மும்பை புதிய உலக சாதனையும் படைத்துள்ளது.

இதையும் படிங்க : எப்பா என்னா வெயில், இந்தியாவுல எப்டி வாழ்றீங்க ! அனலில் தவிக்கும் தெ.ஆ வீரர்கள் – சிறப்பு ஏற்பாடு

அந்த பட்டியல் இதோ:
1. 725 ரன்கள் – மும்பை, உத்தரகாண்ட்க்கு எதிராக, 2022*
2. 685 ரன்கள் – நியூ சௌத் வேல்ஸ், குயின்ஸ்லாந்துக்கு எதிராக, 1930
3. 675 ரன்கள் – இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 1928
4. 638 ரன்கள் – நியூ சௌத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 1921

Advertisement