ஐபிஎல் ஆழம் பாத்தாச்சு, இனி உலக டி20 தொடர்களை வெற்றிக்கொள்ள மும்பை அறிவித்த சூப்பர் பிளான் – முழுவிவரம்

Nita Ambani MI
- Advertisement -

கடந்த 2008இல் 8 அணிகளுடன் இளம் வீரர்களை கண்டறியும் சாதாரண டி20 தொடராக உருவாக்கப்பட்ட ஐபிஎல் தொடர் கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களை கடந்து இன்று உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக உருவெடுத்துள்ளது. ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளை மிஞ்சும் அளவுக்கு த்ரில்லர் தருணங்களை விருந்து படைக்கும் தரத்தைக் கொண்ட ஐபிஎல் ஐசிசியை விட ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை பணமாக கொட்டிக் கொடுக்கிறது. அதனால் இந்த வருடம் 10 அணிகளாக விரிவடைந்த ஐபிஎல் வரும் ஆண்டுகளில் 94 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட தொடராக விஸ்வரூபம் எடுக்க தயாராகி வருகிறது.

ஐபிஎல் தொடரை போலவே அதில் அணிகளை வாங்கிய நிர்வாகங்கள் இன்று பிரமாண்ட வளர்ச்சி கண்டு மேலும் பணக்காரர்களாகியுள்ளனர். அதனால் தங்களது நிர்வாகத்தை உலக அளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள அவர்கள் வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, அமீரகம் போன்ற வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் தங்களது கிளை அணிகளை வாங்கியுள்ளனர். இதில் ஐபிஎல் தொடரில் கேப்டன் ரோகித் சர்மாவின் வருகைக்குப் பின் 2013 முதல் அபார எழுச்சி கண்ட மும்பை இந்தியன்ஸ் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழ்கிறது.

- Advertisement -

மும்பையின் கிளைகள்:
அந்த வகையில் அதிகக் கோப்பைகள், சாதனைகள் ரசிகர்கள் என ஐபிஎல் தொடரின் ஆழத்தை ஏற்கனவே பார்த்துவிட்ட அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் அமீரகத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய டி20 தொடரில் தங்களது 2 புதிய அணிகளை வாங்கியுள்ளது. அதில் தென்னாப்பிரிக்காவில் வாங்கியுள்ள தங்களது அணிக்கு எம்ஐ கேப் டவுன் என பெயரிட்டுள்ள அந்த அணி நிர்வாகம் அமீரகத்தில் வாங்கியுள்ள அணிக்கு எம்ஐ எமிரேட்ஸ் என்ற பெயரை சூட்டியுள்ளது.

அத்துடன் இந்த 2 புதிய அணிகளிலும் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து உட்பட வெளிநாடுகளை சேர்ந்த நட்சத்திர வீரர்களை வாங்கி அறிவிதுள்ள அந்த அணி நிர்வாகம் அடுத்த கட்டமாக தங்களுடைய ஜெர்ஸி மற்றும் பயிற்சியாளர்களை தீர்மானிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சச்சின் டெண்டுல்கர், ஜஹீர் கான், மகிளா ஜெயவர்தனே போன்ற ஜாம்பவான்களை பயிற்சியாளராக நியமித்து கோப்பைகளை வென்ற அந்த அணி நிர்வாகம் தற்போது இந்த உலகிற்கு முன்னோடியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

- Advertisement -

புதுமையான அறிவிப்பு:
அதாவது தற்போது தங்களுடைய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் என்பது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை கடந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் அமீரகம் ஆகிய 3 நாடுகளில் வளர்ந்துள்ளதால் அந்த 3 அணிகளையும் சேர்த்து கவனிக்க இலங்கை ஜாம்பவான் மகிளா ஜெயவர்தனேவுக்கு “மும்பை இந்தியன்ஸ் நிர்வாக உலக செயல்பாடுகளின் தலைவர்” என்ற புதிய பதவியை கொடுத்துள்ளது. அதனால் இதுவரை ஐபிஎல் தொடரில் மும்பையின் பயிற்சியாளராக இருந்த அவர் விரைவில் அதை ராஜினாமா செய்துவிட்டு இந்த 3 அணிகளின் செயல்பாடுகளையும் சேர்த்து கவனிக்கும் தலைவராக செயல்பட உள்ளார்.

அதேபோல் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த இந்திய ஜாம்பவான் ஜாஹீர் கானுக்கு “மும்பை இந்தியன்ஸ் நிர்வாக உலக கிரிக்கெட்டின் முன்னேற்ற தலைவர்” என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ராஜஸ்தான், கொல்கத்தா போன்ற அணி நிர்வாகங்கள் வெளிநாடுகளில் தங்களது கிளைகளை வைத்திருந்தாலும் மும்பை தான் இது போன்ற புதிய பதவியை அறிவித்து அதில் ஜாம்பவான்களை நியமித்து அமர்க்களப்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்த பதவி பற்றி மகிளா ஜெயவர்தனே பேசியது பின்வருமாறு. “எம்ஐ அணிக்காக உலக அளவிலான செயல்பாடுகளில் ஈடுபடுவது கௌரவமாகும். மிஸ்டர் அம்பானி மற்றும் ஆகாஷ் ஆகியோரது வழிகாட்டுதலில் உலக அளவில் எம்ஐ மிகப்பெரிய பிராண்ட்டாக வளர்ந்துள்ளது. தற்போது இந்த புதிய பொறுப்பில் அதை மேலும் வளர்க்க நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்”என்று கூறினார்.

இதையும் படிங்க : பிசிசிஐ தலைவர் கங்குலி செயலாளர் ஜெய் ஷா வழக்கில் சுப்ரிம் கோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பின் முழுவிவரம்

இந்த அறிவிப்பு பற்றி ஜாஹிர் கான் பேசியது பின்வருமாறு. “இந்த வாய்ப்பை என்னை நம்பி வழங்கியதற்கு நீதா அம்பானி மற்றும் ஆகாஷ் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். ஒரு கிரிக்கெட் வீரராகவும் பயிற்சியாளராகவும் என்னுடைய சொந்த வீடாக இருக்கும் மும்பையின் இந்த புதிய பயணத்தில் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பயணத்தில் உலக அளவில் முதலீடுகள் செய்துள்ளவர்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement