
பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்று முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி ஜனவரி 25ஆம் தேதி முல்தான் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸில் போராடி 163 ரன்கள் குவித்தது. முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் 38-7 என சரிந்த அந்த அணிக்கு அதிகபட்சமாக 9, 10, 11 இடங்களில் விளையாடிய குடகேஷ் மோட்டி 55, ரோச் 25, ஜோமேல் வேரிக்கன் 36* ரன்கள் எடுத்து மானத்தைக் காப்பாற்றி திருப்புமுனையை உண்டாக்கினர்.
பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக நோமன் அலி ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக களம் இறங்கிய பாகிஸ்தானை பவுலிங் செய்வதற்கு சாதகமாக இருந்த அதே ஆடுகளத்தில் அட்டகாசமாக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் 154 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அணிக்கு அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்ததாக ஒன்பது ரன்கள் முன்னிலையுடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மிகவும் நிதானமாகவும் நேர்த்தியாகவும் விளையாடி 244 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ப்ரத்வெய்ட் 52, அமீர் ஜங்கோ 30, கெவின் சின்க்லைர் 28, தேவின் இம்லச் 35 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சஜித் கான் மற்றும் நோமன் அலி தலா நான்கு விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
இறுதியில் 254 என்ற இலக்கை துரத்தும் பாகிஸ்தானுக்கு கேப்டன் சான் மசூத் 2, முகமது ஹுராரியா 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அடுத்ததாக நிதானமாக விளையாடிய பாபர் அசாம் 31, கம்ரான் குலாம் 19 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அப்போது நிறைவுக்கு வந்த இரண்டாவது நாள் ஆட்டநேரம் முடிவில் பாகிஸ்தான் 76-4 ரன்கள் எடுத்து போராடி வருகிறது.
இதையும் படிங்க: ஐசிசி மகளிர் அண்டர்-19 உ.கோ: 7.1 ஓவரில் 66 ரன்ஸ்.. வங்கதேசத்தை சாய்த்த இந்தியா.. செமி ஃபைனலில் மோதுவது யார்?
களத்தில் ஷாக்கீல் 13*, காசிப் அலி 1* ரன்களில் உள்ளார்கள். தற்சமயத்தில் பாகிஸ்தானுக்கு வெற்றி பெற 178 ரன்கள் தேவைப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 6 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. ஆரம்பம் முதலே ஆடுகளம் பவுலிங் செய்வதற்கு சாதகமாக இருப்பதால் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறவே வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் பாகிஸ்தான் மண்ணில் 21ஆம் நூற்றாண்டில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெற்றியை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.