மலேசியாவில் ஐசிசி 2025 மகளிர் அண்டர் 19 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் லீக் சுற்றில் சிறப்பாக விளையாடிய இந்தியா 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த நிலையில் ஜனவரி 26ஆம் தேதி தங்களுடைய முதல் சூப்பர் ஆறு போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது.
கோலாலம்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் ஆரம்ப முதலே இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சுக்கு எதிராக அதிரடி காட்ட முடியாமல் திணறியது. அந்த வகையில் கிட்டதட்ட டெஸ்ட் இன்னிங்ஸ் போல விளையாடிய வங்கதேசம் 20 ஓவரில் 64-8 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா அசத்தல்:
அந்த அணிக்கு 9 வீராங்கனைகள் 10 ரன்கள் கூட தாண்டாத நிலையில் அதிகபட்சமாக கேப்டன் சௌமியா அக்தர் 21* ரன்கள் எடுத்தார். இந்திய அணிக்கு அதிகபட்சமாக வைஷ்ணவி சர்மா மூன்று விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்ததாக 65 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு தமிழக வீராங்கனை கமலினி 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
ஆனால் மற்றொரு துவக்க வீராங்கனை கொங்காடி திரிஷா அதிரடியாகவும் நிதானமாகவும் விளையாடி 8 பவுண்டரியுடன் 40 (31) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். இறுதியில் கேப்டன் நிக்கி பிரசாத் 5* (2), சனிக்கா சால்க் 11* (5) ரன்கள் எடுத்தார்கள். அதனால் 7.1 ஓவரில் 66-2 ரன்கள் எடுத்த இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
செமி ஃபைனலில் இந்தியா:
இந்த வெற்றியால் இந்திய அணி செமி பைனல் சுற்றுக்கு ஆரம்பத்திலேயே தகுதி பெற்று அசத்தியுள்ளது. அதே போல ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளும் தங்களுடைய சூப்பர் 6 போட்டிகளில் வென்று செமி பைனல் வாய்ப்பை உறுதி செய்துள்ளன. அதற்கு முன்பாக இந்திய அணி தங்களுடைய இரண்டாவது சூப்பர் 6 போட்டியில் ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: ரிங்கு சிங் மற்றும் நிதீஷ் ரெட்டிக்கு பதிலாக இந்திய அணியில் இணைந்த 2 வீரர்கள் – யார் தெரியுமா?
அந்தப் போட்டி வரும் ஜனவரி 28ஆம் தேதி கோலாலம்பூரில் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளது. அந்தப் போட்டி முடிந்ததும் செமி ஃபைனலில் இந்தியாவுடன் மோதப் போகும் அணி யார் என்பது தெரிய வரும். அந்த வகையில் இத்தொடரில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.



