தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த இந்தியா தொடரை சமன் செய்ய ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்கிய 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது அதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக கெய்ல் வேர்ரின் 15 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்களை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியாவும் சவாலான மைதானத்தில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் வியப்பையும் கொடுத்தது.
அசத்திய முகேஷ்:
ஏனெனில் 153/4 என்ற நிலையில் இருந்த இந்தியா மேற்கொண்டு 6 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி, ரபாடா, நன்ரே பர்கர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 62/3 ரன்கள் எடுத்துள்ளது.
எனவே இன்னும் 36 ரன்கள் பின்தங்கியுள்ள அந்த அணியை 2வது நாளில் விரைவில் ஆல் அவுட் செய்தால் இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. முன்னதாக முதல் போட்டியில் ரன்களை வாரி வழங்கிய சர்துள் தாக்கூருக்கு பதிலாக இப்போட்டியில் முகேஷ் குமார் விளையாடும் வாய்ப்பை பெற்றார். கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அறிமுகமாகி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 2.2 ஓவர்களை வீசி 1 ரன் கூட கொடுக்காமல் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
குறிப்பாக சிராஜ், பும்ரா ஆகியோர் நெருப்பாக வீசிய நிலையில் தன்னுடைய பங்கிற்கு அசத்திய அவர் 1 ரன் கூட கொடுக்காமல் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 1 ரன் கூட கொடுக்காமல் 2 விக்கெட்களை எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற தனித்துவமான சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: மனசுலயும் கிங்கு தான்.. டீன் எல்கருக்கு கடைசி போட்டியில் விராட் கோலி செய்த காரியம்
இதற்கு முன் உலக அளவில் 1959ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ரிச்சி பெனட் இங்கிலாந்துக்கு எதிராக3 விக்கெட்களும் , 2021இல் இங்கிலாந்தின் ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிராக 2 விக்கெட்டுகளும் 1 ரன் கூட கொடுக்காமல் அதிகபட்சமாக எடுத்துள்ளனர். அத்துடன் 2வது இன்னிங்ஸிலும் இதுவரை 2 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் மொத்தம் 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அதனால் இவரை முதல் போட்டியில் எடுத்திருந்தால் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக கிடைத்திருக்கும் என்று தற்போது ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.