இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ஜூலை 20-ஆம் தேதி டிரினிடாட் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்தியானது தங்களது முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது மூன்றாம் நாள் இரண்டாவது செஷன் வரை 2 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணிக்காக அறிமுகமாக பந்துவீச்சாளராக களமிறங்கிய முகேஷ் குமார் வெஸ்ட் இண்டீஸ் வீரரான கிரெய்க் மெக்கன்சியை வீழ்த்தி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்துள்ளார். ஷர்துல் தாகூருக்கு பதிலாக அறிமுக வீரராக களமிறங்கியுள்ள இந்த முகேஷ் குமார் யார்? என்பது குறித்த தெளிவான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம்.
அதன்படி பெங்கால் அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார் கடந்த சில தொடர்களாகவே இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து வந்தாலும் அவருக்கான அறிமுக வாய்ப்பு கிடைக்காமலே இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இடம் பெற்றிருந்த அவர் ஷர்துல் தாகூருக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அறிமுக வாய்ப்பை பெற்றார்.
இது குறித்து போட்டியின் ஆரம்பத்தில் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் : ஷர்துல் தாகூர் இரண்டாவது போட்டியில் விளையாடும் அளவிற்கு உடற்தகுதியுடன் இல்லை. அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாகவே முகேஷ் குமார் அறிமுகமாகிறார் என்று தெரிவித்திருந்தார்.
ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் 39 ஆட்டங்களில் விளையாடியுள்ள முகேஷ் குமார் 149 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதுடன் இந்திய ஏ அணிக்காகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். அந்த வகையில் கடந்த சில டெஸ்ட் தொடர்களாகவே இந்திய அணியில் பயணித்து வந்த அவருக்கு இம்முறை அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்திய அணி இன்னும் அவரை சரியா யூஸ் பண்ணல. அவரு எப்பேர்ப்பட்ட பிளேயர் தெரியுமா? – சி.எஸ்.கே வீரரை ஆதரித்த ராயுடு
அதோடு இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக பங்கேற்று விளையாடியிருந்த அவர் 10 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அறிமுக வாய்ப்பை பெற்ற அவர் முதல் விக்கெட்டை வீழ்த்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.