பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களில் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்பே, ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக தோற்ற பாகிஸ்தான் 2024 டி20 உலகக் கோப்பையில் கத்துக்குட்டி அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. இது போக சமீபத்தில் வங்கதேசத்திடம் சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது.
அதனால் 1992 உலக சாம்பியனான பாகிஸ்தான் இன்று இப்படி திண்டாடுவதை பார்ப்பது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் 1990களில் ஆஸ்திரேலியாவுக்கு சவால் விடுக்கும் அளவுக்கு பாகிஸ்தான் வலுவான அணியாக திகழ்ந்ததாக முன்னாள் வீரர் முடாசர் நாசர் கூறியுள்ளார். அதே சமயம் 90களில் சில பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்ட புகாரிலும் சிக்கினார்கள்.
ஃபிக்சிங்ன்னு நினைச்சாங்க:
அதனால் இந்தியாவிடம் தோற்றால் உடனே பாகிஸ்தான் அணி ஃபிக்ஸிங் செய்து விட்டார்கள் என்று தங்கள் நாட்டு மக்கள் நினைத்ததாகவும் நாசர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 1976 – 1989 காலகட்டங்களில் 76 டெஸ்ட், 122 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானுக்காக விளையாடிய அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “90களில் ஆஸ்திரேலியாவை போலவே பாகிஸ்தான் அணியும் சிறந்த திறமையுடைய அணியாக இருந்தது என்று நினைக்கிறேன்”
“ஆனால் அது தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற ஒரு சுத்த பயக்காரணியாகவும் இருந்தது. இங்கே நான் கொஞ்சம் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசுகிறேன். சூதாட்ட சர்ச்சை பற்றிய விஷயங்கள் பின்னணியில் இருந்தன. அதனால் பாகிஸ்தான் அணி ஒவ்வொரு முறையும் தோற்கும் போது அது பிக்சிங் செய்யப்பட்ட போட்டி என்று மக்கள் நினைத்தனர்”
இந்தியாவின் தோல்வி:
“நாம் சிறந்த அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தோம் என்பதை ஒப்புக்கொள்ள யாரும் தயாராக இல்லை. 90களின் ஆரம்ப காலங்களில் நானும் பாகிஸ்தான் அணியில் இருந்தேன். அப்போது தோல்வியை சந்தித்து விடுவோமா என்ற பயம் எனக்குள் இருந்தது. ஏனெனில் தோல்வியை சந்தித்தால் மக்கள் உடனே அதை ஃபிக்சிங் என்று நம்ப ஆரம்பித்தனர்”
இதையும் படிங்க: பேஸ்பால் மாதிரி இந்தியாவின் ஸ்டைலுக்கு இந்த பெயரை வெச்சுருக்காங்க.. டிராவிட், கம்பீர் பற்றி அஸ்வின்
“இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மற்றொரு காரணியாக இருந்தது. எந்த இந்தியரும் பாகிஸ்தானியரும் தோல்வியை சந்திக்க விரும்பவில்லை. அதை நாங்கள் சார்ஜாவில் சந்தித்துள்ளோம். இந்தியா – பாகிஸ்தான் மிகவும் பெரிய போட்டி. இது தான் அந்த காலத்தில் பொதுமக்களின் பார்வையாக இருந்தது. துரதிஷ்டவசமாக மேட்ச் ஃபிக்சிங் என்பது பாகிஸ்தான் அணி மீது தனி பாரத்தை உண்டாக்கியது” என்று கூறினார்.