வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக நிறைவு பெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா ஒயிட்வாஷ் செய்து வென்றது. குறிப்பாக கான்பூரில் நடைபெற்ற 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்ற விதம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. ஏனெனில் 2, 3வது நாட்கள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால் போட்டி டிராவில் முடிவடையும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
இருப்பினும் கடைசி 2 நாட்களில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி வங்கதேசத்தை சரமாரியாக அடித்து நொறுக்கி அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை குவித்த அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது. மேலும் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 8, ஒரு டெஸ்ட் போட்டியில் 7க்கும் மேற்பட்ட ரன்ரேட்டில் பேட்டிங் செய்த முதல் அணியாகவும் இந்தியா 2 உலக சாதனை படைத்தது.
பேஸ்பால் போல கம்’பால்:
அது போக ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற இங்கிலாந்தின் (2022இல் 87) சாதனையை உடைத்த இந்தியா (2024இல் 94*) புதிய உலக சாதனை படைத்தது. அந்த வகையில் பேஸ்பால் என்ற பெயரில் அதிரடியாக விளையாடுவதாக புகழ் பாடும் இங்கிலாந்தை விட இந்தியா உண்மையான அதிரடி பாதையில் விளையாடி சாதனைகளை படைத்தது.
இந்நிலையில் பேஸ்பால் போல இந்தியா விளையாடும் ஸ்டைலுக்கு கம்’பால் என்று சிலர் பெயரிட்டு சமூகவலைதளங்களில் பேசுவதை பார்த்ததாக அஸ்வின் கூறியுள்ளார். அதாவது இங்கிலாந்தின் பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் பட்டப்பெயர் பேஸ் என்று சொல்லிலிருந்து பேஸ்பால் உருவானது. அதே போல கம்பீரின் முதலிரண்டு எழுத்துக்களை வைத்து இந்திய அணியின் ஆட்டத்தை ரசிகர்கள் அழைக்கத் துவங்கியுள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார்.
ராகுல் டிராவிட் – கௌதம் கம்பீர்:
இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அஸ்வின் பேசியது பின்வருமாறு. “கம்பால் என்பது பற்றி சில பதிவுகளை நான் பார்த்தேன். சிலர் அதை பகிர்ந்தனர். அது சுவாரசியமாக இருக்கிறது. அணியின் நலனுக்காக இங்கே பயிற்சியாளர்கள் உள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் மீது அவர்கள் கொண்டுள்ள ஆர்வத்தில் பெரிய வித்தியாசங்களை நான் காணவில்லை”
இதையும் படிங்க: அதெல்லாம் பொய் நம்பாதீங்க.. தனது காயம் பற்றிய செய்திகளை வெளியிட்ட ஊடகங்களை விளாசிய ஷமி
“அவர்கள் இந்திய அணியில் சிறப்பான அன்பைக் கொண்டு வருகின்றனர். நான் ராகுல் பாய் கௌதம் பாய் ஆகிய இருவருடனும் விளையாடியுள்ளேன். அவர்கள் பயிற்சியாளர்களாகவும் இருந்துள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் மீதான அவர்களுடைய ஆர்வம் ஆச்சரியமாக இருக்கிறது. தங்களுடைய அனுபவத்தை அவர்கள் எங்களுக்கு கொடுப்பதற்காக இதை விட என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது” என்று கூறினார்.