பல்கலைகழகமான தோனியின் அந்த அம்சத்தை இளம் வீரர்கள் பின்பற்ற முயற்சிக்க கூடாது – முன்னாள் கோச் கோரிக்கை, முழுவிவரம்

Dhoni
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கடந்த 2020 இந்திய சுதந்திர தினத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். கடந்த 2004இல் சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் அதிரடியான பேட்டிங், மின்னல் வேக விக்கெட் கீப்பிங் போன்றவற்றால் சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் கேப்டன்களின் நம்பிக்கையை பெற்று நிரந்தரமான இடத்தைப் பிடித்தார். 2007இல் முன்னனுபவம் இல்லாத போதிலும் தம்மிடம் நம்பி கொடுக்கப்பட்ட கேப்டன்ஷிப் பொறுப்பில் அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழி நடத்திய அவர் தனது திறமையான முடிவுகளால் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையை இந்தியாவிற்கு வாங்கி கொடுத்தார்.

Dhoni

- Advertisement -

அதேபோல் 2011இல் கங்குலி உருவாக்கிய தரமான வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து அதுவும் சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்று காட்டிய அவர் 2013ல் தாம் உருவாக்கிய ரோகித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா போன்ற இளம்படையை வைத்து இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று வரலாற்றில் தன்னை மிகச்சிறந்த கேப்டனாக நிரூபித்தார். அதேபோல் தனது வாழ்நாளின் பெரும்பாலான போட்டிகளில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அவர் இந்தியா தோற்க இருந்த எத்தனையோ போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த பினிஷெராகவும் போற்றப்படுகிறார்.

ஸ்டம்பிங் நாயகன்:
அப்படி பன்முகத் திறமைகளை கொண்டிருந்த அவர் விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டும் இல்லாமல் அதிரடியாக பேட்டிங் செய்ய வேண்டும் என்ற நிலைமையை ஏற்படுத்தி இந்திய வரலாற்றில் விக்கெட் கீப்பர்களின் அடிப்படை இலக்கணத்தை மாற்றியதில் முக்கிய பங்காற்றினார். அதிலும் மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்வதில் அவருக்கு நிகர் யாருமே கிடையாது எனலாம். ஏனெனில் சுழல் பந்துவீச்சாளர்களிடம் ஏமாறும் எதிரணி பேட்ஸ்மேன்கள் ஒரு இன்ச் அளவு காலை தூக்கினாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் ஸ்டம்பிங் செய்ததை ரசிகர்கள் எப்போதும் மறக்க முடியாது.

Dhoni 2

சொல்லப்போனால் ஜாம்பவான்களாக கருதப்படும் ஆடம் கில்கிறிஸ்ட், குமார் சங்ககாரா ஆகியோரைக் காட்டிலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் (123) செய்த விக்கெட் கீப்பராக உலக சாதனை படைத்துள்ள எம்எஸ் தோனி இந்தியாவுக்கு அதிலும் பெருமை சேர்த்துள்ளார். அந்த அளவுக்கு அற்புதமான அவரை பல இளம் விக்கெட் கீப்பர்கள் தங்களுக்கு ரோல் மாடல்களாக பின்பற்றி வருகிறார்கள்.

- Advertisement -

தோனி பல்கலைகழகம்:
இந்நிலையில் விக்கெட் கீப்பிங் செய்வதில் எம்எஸ் தோனி ஒரு பல்கலைக்கழகம் என்று பாராட்டியுள்ள முன்னாள் இந்திய பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் அவரின் ஸ்டம்பிங் செய்யும் யுத்தியை இளம் விக்கெட் கீப்பர்கள் முயற்சிக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கான காரணத்தை தெளிவு படுத்தி அவர் பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனி ஒரு விக்கெட் கீப்பராக தமக்குத்தாமே ஒரு பல்கலைக்கழகம் ஆவார். தோனியை ஒரு விக்கெட் கீப்பராக புத்தகத்தில் எழுத வித்தியாசமானவர். அவரின் எந்த நுணுக்கங்களும் ஒருநாள் இரவில் வளர்ந்தது கிடையாது. 2011 உலக கோப்பையை துவங்கிய போது அல்லது வென்றபோது அது அவரின் தொகுப்பில் இல்லை. அது அதிகப்படியான போட்டிகளில் விளையாடியதால் ஏற்பட்ட விழிப்புணர்வால் வளர்ந்த ஒன்றாகும்”

Sridhar

“இதுபோன்றவற்றை 2016க்கு முன்பு அவர் செய்வதை நீங்கள் பார்த்திருக்க முடியாது. போட்டியை பற்றிய விழிப்புணர்வு அவரிடம் ஏராளமாக வளர்ந்தது. மேலும் நீங்கள் பார்க்கும் அவரது ஸ்டம்பிங் முறைகளை செய்ய இளம் விக்கெட் கீப்பர்கள் தங்களது வீடு அல்லது பயிற்சி கூடத்தில் முயற்சிக்க கூடாது என நான் எச்சரிப்பேன். ஏனெனில் அது போன்ற துல்லியமான ஸ்டம்பிங்களை விக்கெட் கீப்பராக மில்லியன் கணக்கான பந்துகளை சேகரித்த பின்பே அவர் அதை செய்தார். அதை ரீப்ளேயில் மெதுவாக நீங்கள் பார்த்தாலும் அவரது கைகள் ஸ்டப்களை நோக்கி முன்னோக்கி வரும்போது அவரது மணிக்கட்டுகள் பின்னோக்கி சென்று பந்தை ஸ்டம்பில் அடிப்பதற்கு மெத்தை போன்ற தன்மையை ஏற்படுத்தி கொடுப்பதை பார்க்க முடியும்” என்று கூறினார்.

அதாவது ஏராளமான போட்டிகளில் விளையாடி விளையாடி மில்லியன் கணக்கான பந்துகளை பிடித்த பின்பே அதிவேகமாக ஸ்டம்பிங் செய்யும் திறமை தோனிக்கு இயற்கையாகவே தாமாகவே வந்துள்ளதால் அனுபவமில்லாத இளம் வீரர்கள் அதை முயற்சிக்கும் போது காயமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கும் ஸ்ரீதர் எடுத்த எடுப்பிலேயே அவரைப்போல் ஸ்டம்பிங் செய்ய வேண்டும் என்று முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அவரைப் போலவே நிறைய போட்டிகளில் விளையாட விளையாட போட்டியை பற்றிய முழு விழிப்புணர்வை உணர்ந்த பின்பு அதை முயற்சிக்க வேண்டுமென்று அவர் கூறியுள்ளார்.

Advertisement