வீடியோ : ரசிகனை போல நெஞ்சில் ஆட்டோகிராப் வாங்கிய கவாஸ்கர் – முழங்கால் வலியுடன் தமிழக ரசிகர்களுக்கு தல தோனி நன்றி

MS Dhoni Gavaskar CSk
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 14ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற 61வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா தங்களுடைய 6வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 30% தக்க வைத்துள்ளது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நேர்த்தியாக பந்து வீசிய கொல்கத்தாவின் தரமான சுழல் பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 20 ஓவர்களில் 144/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் சிவம் துபே 1 பவுண்டரி 3 சிக்சருடன் 48* (34) ரன்கள் எடுக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட் சாய்த்தனர். அதை துரத்திய கொல்கத்தாவுக்கு ஜேசன் ராய் 12, ரஹ்மத்துல்லா குர்பாஸ் 1, வெங்கடேஷ் ஐயர் 9 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தீபக் சஹாரின் ஸ்விங் கலந்த வேகத்தில் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் கேப்டன் நிதிஷ் ராணா 57* (44) ரன்களும் ரிங்கு சிங் 54 (43) ரன்களும் எடுத்து 18.3 ஓவர்களிலேயே வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

ரசிகனாகா கவாஸ்கர்:
அதனால் டெல்லிக்கு எதிராக நடைபெறும் கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து சேப்பாக்கத்தில் முதல் முறையாக இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான தமிழக ரசிகர்கள் சென்னை அணிக்கு ஆதரவு கொடுத்தனர். குறிப்பாக எதிரணியின் மைதானங்களிலேயே தோனிக்காக ஆதரவு கொடுத்த ரசிகர்கள் சேப்பாக்கத்தில் அவர் சிக்ஸர் அடித்த போதெல்லாம் மெரினாவுக்கு கேட்கும் அளவுக்கு 100 டெசிபல் சத்தத்தை மிஞ்சி ஆரவாரம் செய்தனர்.

அந்த நிலையில் நேற்றுடன் இந்த சீசனில் சேப்பாக்கத்தில் சென்னை பங்கேற்கும் லீக் சுற்று போட்டிகள் முடிந்தன. அந்த வகையில் தங்களுக்கு இந்த சீசன் முழுவதும் அபாரமான ஆதரவு கொடுத்த தமிழக ரசிகர்களுக்கு நேற்றைய கடைசி லீக் போட்டியின் முடிவில் ஒலிபெருக்கியில் நன்றி தெரிவித்த கேப்டன் எம்எஸ் தோனி தனது கையொப்பமிட்ட பந்துகள், மஞ்சள் நிற பதாகைகள், ஜெர்ஸி, தொப்பிகள் போன்ற உபகரணங்களை பரிசாக மைதானத்தை சுற்றிச் சென்று கொடுத்தார். குறிப்பாக அவர் தூக்கிப்போட்ட பரிசுகளை பிடிப்பதற்கு ரசிகர்கள் ஆரவாரத்துடன் போட்டி போட்டனர்.

- Advertisement -

ஆனால் விரைவில் 42 வயதை தொடுவதால் ஏற்கனவே முழங்கால் வலியுடன் இத்தொடரில் விளையாடி வரும் தோனி போட்டி முடிந்ததும் வலியை குறைப்பதற்காக ஐஸ் பேக் வைத்துக்கொண்டே சிரித்த முகத்துடன் அந்த பரிசுகளை தமிழக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொடுத்தது அனைவரது நெஞ்சங்களை தொட்டது. அதை விட இந்த போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்ட இந்திய நட்சத்திர ஜாம்பவான் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அனைவருக்கும் பரிசு கொடுக்கும் தோனியிடம் ரசிகனை போல ஓடி சென்று தன்னுடைய நெஞ்சின் மீது இருக்கும் சட்டையில் ஆட்டோகிராப் போடுமாறு கேட்டுக் கொண்டார்.

அதை சற்றும் எதிர்பாராத தோனி “நீங்க போய் என்கிட்ட ஆட்டோகிராப் கேட்கலாமா” என்ற வகையில் பணிவுடன் கட்டிப் பிடித்து உடனடியாக கவாஸ்கர் கேட்ட இடத்தில் ஆட்டோகிராப் போட்டு நன்றியும் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட்டின் மகத்தான ஜாம்பவானாக போற்றப்படும் கவாஸ்கர் ஒரு சாதாரண ரசிகனாக மாறி தோனியிடம் அப்படி ஆட்டோகிராப் வாங்கியது ஒட்டுமொத்த முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க:IPL 2023 : பாண்டேவை அவர் அவுட்டாக்கிய பந்து வார்னேவின் பால் ஆஃப் தி செஞ்சூரி மாதிரி இருந்துச்சு – இந்திய வீரரை பாராட்டிய சேவாக்

அத்துடன் சிவம் துபே, மொய்ன் அலி, துஷார் தேஷ்பாண்டே, ருதுராஜ் உள்ளிட்ட சென்னை அணியினரும் தமிழில் எழுதிய பதாகைகளுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கையொப்பமிட்ட பந்துகள் போன்ற பரிசுகளை அன்புடன் கொடுத்தனர்.

Advertisement