
ஐபிஎல் 2024 தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக போராடி வருகிறது. இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 7 வெற்றியை பதிவு செய்துள்ள அந்த அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது. எனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல பெங்களூருவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை இருக்கிறது.
முன்னதாக சென்னை அணிக்கு 5 கோப்பைகளை கேப்டனாக வென்று சாதனை படைத்த எம்.எஸ். தோனியை சிஎஸ்கே ரசிகர்கள் தல என்று கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக அவர் சிக்ஸர் அடிப்பதை பார்க்க வேண்டும் என்பதற்காக ஜடேஜா அவுட்டாக வேண்டும் என்று விரும்பும் அளவுக்கு தோனி மீது சிஎஸ்கே ரசிகர்கள் வெறித்தனமான அன்பை வைத்திருக்கின்றனர்.
கடவுள் மாதிரி:
மேலும் அவர் பேட்டிங் செய்யும் போதெல்லாம் மெரினாவுக்கு கேட்கும் அளவுக்கு ஆண்ட்ரே ரசல் காதை பொத்திக் கொள்ளும் அளவுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் ஆதரவு தருவது வழக்கமாகும். அந்த வரிசையில் ராஜஸ்தானுக்கு எதிராக மே 12ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் தோனிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் மிகப்பெரிய பேனரை ரசிகர்கள் வைத்திருந்தனர். அதுவே சேப்பாக்கத்தில் தோனியின் கடைசி போட்டியாகவும் இருக்கும் என்பதால் அதைப் பார்க்க மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர் என்று சொல்லலாம்.
இந்நிலையில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு தோனி கடவுளைப் போன்றவர் என்று முன்னாள் வீரர் ராயுடு அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். அதனால் வரும் காலங்களில் அவருக்கு சென்னையில் ரசிகர்கள் கோவில் கட்டுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் ராயுடு கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் சென்னையின் கடவுள். சென்னையில் எம்எஸ் தோனியின் கோவில் வருங்காலங்களில் கட்டப்படலாம் என்று நான் உறுதியாக சொல்வேன்”
“இந்தியாவுக்காக அவர் 2 உலகக் கோப்பையை வென்று மகிழ்ச்சியை கொண்டு வந்தவர். அதே போல சென்னை அணிக்கு ஐபிஎல் கோப்பைகளையும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் பெற்றுத் தந்தவர். அவர் எப்போதும் தன்னுடைய வீரர்கள் மீது நம்பிக்கை வைப்பவர். தனது அணிக்காக சிறந்தவற்றை செய்யக் கூடியவர். நாட்டுக்காகவும் சிஎஸ்கே அணிக்காகவும் சாதித்துள்ள லெஜெண்டான அவரை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர்”
இதையும் படிங்க: பவர்பிளேவிலேயே இப்படி ஆடுனா எப்படி ஜெயிக்கிறது.. ஆர்.சி.பி அணிக்கெதிரான தோல்வி குறித்து – அக்சர் படேல் வருத்தம்
“அவர்கள் சேப்பாக்கத்தில் இதுவே தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று நினைக்கின்றனர்” எனக் கூறினார். முன்னதாக தமிழ்நாட்டில் ரஜினிகாந்த், குஷ்பூ போன்ற நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய வரலாறு உள்ளது. எனவே தோனிக்கும் வருங்காலங்களில் சிஎஸ்கே ரசிகர்கள் அதை செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே சொல்லலாம்.