ஏபிடி விக்கெட் எடுத்தும் திட்டுனாரு, அது மட்டும் நடந்திருந்தால் – தோனி மீது இந்திய வீரர் ஆதங்கம்

Dhoni
- Advertisement -

இந்தியா போன்ற மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் 11 பேர் மட்டும் விளையாடக்கூடிய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது நிறைய வீரர்களுக்கு சவாலாகும். அதில் திறமை, அதிர்ஷ்டம் ஆகியவற்றால் கிடைக்கும் வாய்ப்பை இறுக்கமாக பிடித்து பெரிய ஸ்டார்களாக சிலரால் மட்டுமே வர முடியும். மறுபுறம் சில வீரர்களுக்கு திறமை இருந்தும் அதிர்ஷ்டம் கை கொடுக்காததால் வாய்ப்பு கிடைக்காமலேயே கடைசி வரை ஓய்வு பெற வேண்டிய நிலைமை ஏற்படும். அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள மத்திய பிரதேச வேகப்பந்து வீச்சாளர் ஈஸ்வர் பாண்டே அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த திங்கள் கிழமையன்று அறிவித்துள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் 73 போட்டிகளில் விளையாடிய இவர் 263 விக்கெட்டுகளை எடுத்து ஐபிஎல் தொடரில் சென்னை, புனே ஆகிய அணிகளில் விளையாடினார். அந்த 2 ஐபிஎல் அணிகளிலும் இந்தியாவின் ஜாம்பவான் கேப்டன் தோனி தலைமையில் விளையாடிய இவர் சென்னை அணிக்காக 25 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அந்த வகையில் உள்ளூர் கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் தமக்கு வாய்ப்பளித்த அணி நிர்வாகத்துக்கும் தம்முடன் இணைந்து விளையாடிய வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர் மகத்தான கேப்டனான தோனியின் தலைமையில் விளையாடியதை நினைவு கூர்ந்து பேசினார்.

- Advertisement -

ஏபிடி விக்கெட்:
அதிலும் 2015இல் பெங்களூருவுக்கு எதிரான ஒரு போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் ஏபி டிவிலியர்ஸ்க்கு எதிராக யார்கர் பந்துகளை வீச வேண்டாம் என்று தோனி தம்மை அறிவுறுத்தியதை மீறி யார்கர் பந்துவீசி விக்கெட் எடுத்ததாக தெரிவிக்கும் அவர் ஒருவேளை அது லோ புல் டாஸ் பந்தாக மாறியிருந்தால் சிக்சராக போயிருக்கும் என்பதற்காக திட்டியதாக கூறியுள்ளார். இருப்பினும் அதன்பின் தனது தோள் மீது தட்டி பாராட்டியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஒருமுறை பெங்களூர் அணிக்கு எதிராக நாங்கள் விளையாடும் போது ஏபி டிவில்லியர்ஸ் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது யார்கர் பந்துகளை வீச முயற்சிக்காமல் சிறப்பாக பந்துவீசுமாறு மஹி பாய் என்னிடம் தெரிவித்தார்”

“அதனால் 4 பந்துகளை சிறப்பாக வீசிய என்னுடைய 5வது பந்தில் டிவில்லியர்ஸ் பவுண்டரி அடித்தார். எனவே அந்த ஓவரில் யார்க்கர் மட்டும் வீசவில்லை என்பதால் அதை வீசுவோம் என்று நினைத்து வீசினேன். ஆனால் அது லோ புல் டாஸ் பந்தாக மாறினாலும் அதிர்ஷ்டவசமாக டிவில்லியர்ஸ் அவுட்டானார். அந்த விக்கெட் எடுத்த பின் “உங்களிடம் யார்கர் வீச வேண்டாம் என சொன்னேனே” என்று தோனி என்னை திட்டினார். இருப்பினும் அதன்பின் தோளில் தட்டி பாராட்டிய அவர் இதையெல்லாம் மனதில் வைக்காமல் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசுவதில் கவனம் செலுத்துங்கள் என்று ஊக்கத்தை கொடுத்தார்” என்று கூறினார்.

- Advertisement -

இந்தியாவுக்காக ஒருமுறைகூட விளையாடாத ஈஸ்வர் பாண்டே கடந்த 2014இல் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து தொடருக்கான டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருந்தும் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பை பெறவில்லை. ஆனால் அந்த தொடரில் தமக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் தனது கேரியர் தலைகீழாக மாறியிருக்கும் என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

“ஒருவேளை தோனி எனக்கு வாய்ப்பளித்திருந்தால் என்னுடைய கேரியர் வேறு விதமாக இருந்திருக்கும். அந்த சமயத்தில் 23 – 24 வயது மட்டுமே நிரம்பியிருந்த நான் நல்ல பிட்னஸ் கொண்டிருந்தேன். அதனால் தோனி எனக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் சிறப்பாக செயல்பட்டிருப்பேன் என்பதால் என்னுடைய கேரியர் வித்தியாசமாக இருந்திருக்கும்” என்று கூறினார்.

இருப்பினும் 2014இல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் தலா 4 – 0 என்ற கணக்கில் அடுத்தடுத்த ஒயிட்வாஷ் தோல்விகளை சந்தித்ததாலும் இஷாந்த் ஷர்மா, புவனேஸ்வர் குமார், முகமத் ஷமி போன்ற அப்போதைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்த காரணத்தாலும் இவருக்கு தோனி வாய்ப்பு வழங்கவில்லை என்றே கூறலாம். ஆனாலும் அந்த சமயத்தில் எம்எஸ் தோனி, விராட் கோலி, யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, இசாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார் போன்ற நட்சத்திரங்களுடன் இருந்த அணியில் இடம் பிடித்திருந்தது கனவு நிஜமான தருணமாக இருந்ததாக தெரிவிக்கும் ஈஸ்வர் பாண்டே ஐபிஎல் தொடரில் சச்சினுக்கு எதிராக பந்து வீசியது மறக்கவே முடியாது என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

Advertisement