
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி 3 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே இந்திய கேப்டனாகவும், 5 ஐ.பி.எல் கோப்பைகளை வென்று கொடுத்த சாம்பியன் கேப்டனாகவும் திகழ்ந்தவர். கடந்த 2023-ஆம் ஆண்டு கடைசியாக ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியை கேப்டனாக வழிநடத்திய அவர் அந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று தந்த கையோடு தனது கேப்டன் பதவியிலிருந்தும் விலகினார்.
அதனை தொடர்ந்து தற்போது முழுநேர விக்கெட் கீப்பராக விளையாடி வரும் தோனி 43 வயதை எட்டியுள்ள வேளையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரே அவருக்கு கடைசி தொடராக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தொடரில் தற்போது விளையாடி வரும் சிஎஸ்கே அணியானது முதல் நான்கு போட்டிகளில் மூன்று தோல்விகளை சந்தித்துள்ளதால் அந்த அணியின் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்தினை சந்தித்துள்ளனர்.
இந்த தொடரில் தோனி பின் வரிசையில் களமிறங்குவதும் முன்பு போன்ற அதிரடி இல்லாமல் சற்று பொறுமையாக விளையாடுவதும் சென்னை அணியின் தோல்விக்கு ஒரு காரணமாகவும் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தோனி சமீபத்தில் அளித்துள்ள ஒரு நேர்கானல் ஒன்றில் அணிக்கு தேவை என்னவோ அதனை செய்ய தயார் என்றும் ஒருவேளை தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அணியின் வெற்றி முக்கியம் என பேசியுள்ளார். அதுகுறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தோனி பேசியதாவது :
உங்கள் அணி முன்னேறினால் தான் உங்களையே திரும்பி பார்ப்பார்கள். நீங்கள் மட்டும் சிறப்பாக விளையாடி உங்கள் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை என்றால் “ஓ அந்த அணி பிளேயரா” என அலட்சியமாக பார்ப்பார்கள். தனிப்பட்ட வீரரை விட அணி வெல்ல வேண்டும். ஒருவேளை நான் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் என்னுடைய அணி வெற்றி பெற்றால் அதையும் நான் மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்வேன் என தோனி கூறியுள்ளார்.
இதையும் படிங்க : நியாயப்படி பாத்தா தோனி 35 வயசுலயே அந்த முடிவை எடுத்திருக்கனும்.. எடுக்காம விட்டது தப்பு – ரஷீத் லத்தீப் விமர்சனம்
மேலும் தற்போது வரை தான் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன் என்றும் விக்கெட் கீப்பராக தன்னுடைய பணி சிறப்பாக இருந்து 15 பந்துகளில் 30 ரன்கள் அடிக்க முடிந்தால் அதுவே அணிக்கு சிறந்த பங்களிப்பாகவும் இருக்கும் என்றும் அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.