ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 25ஆம் தேதி மதியம் அகமதாபாத் நகரில் 67வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத்தை 83 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆறுதல் வெற்றியுடன் இத்தொடரை வெற்றிகரமாக முடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய சிஎஸ்கே 231 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
சிஎஸ்கே அணிக்கு தேவால்ட் ப்ரேவிஸ் 57, டேவோன் கான்வே 52, ஜடேஜா 21*, உர்வில் படேல் 37, ஆயுஷ் மாத்ரே 34, சிவம் துபே 17 என அனைவருமே நல்ல ரன்களை அதிரடியாக எடுத்து மிரட்டினார்கள். அடுத்த விளையாடிய குஜராத்தை அற்புதமாக பவுலிங் செய்த சிஎஸ்கே 18.3 ஓவரில் 147 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 41 ரன்கள் எடுத்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு அதிகபட்சமாக நூர் அஹ்மத், அன்சூல் கம்போஜ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
ருதுராஜ் மீட்பாரு:
இதையும் சேர்த்து 4வது வெற்றியைப் பெற்ற போதிலும் சிஎஸ்கே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து மோசமான சாதனை படைத்தது. இருப்பினும் ப்ரேவிஸ், ஆயுஷ், உர்வில் படேல், நூர் அஹ்மத் போன்ற தரமான இளம் வீரர்கள் கிடைத்தது சிஎஸ்கே அணிக்கு பெரிய பலமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியின் ஓட்டைகளை அடைத்து 2025 படுதோல்வியிலிருந்து எளிதாக மீட்பார் என்று தோனி தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அதற்குத் தகுந்த திறமையான வீரர்களும் திட்டங்களும் இந்த படுதோல்வியலிருந்து கிடைத்துள்ளதாகவும் தோனி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வருடம் தொடர்ந்து துவங்கிய போது சென்னையில் 4 போட்டிகள் நடைபெற்றது. அந்த 4 போட்டிகளிலும் டாஸ் வென்ற நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்ய முடிவு எடுத்தோம்”
எனக்கும் வயசாகிடுச்சு:
“ஆனால் அந்த 4 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்வது நன்றாக இருந்ததாக நான் கருதினேன். அந்த 4 போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டதால் எங்களுடைய பேட்டிங் துறையைப் பற்றி நான் மிகவும் கவலைப்பட்டேன். ஆனால் தற்போது அனைவரும் பேட்டிங் துறையில் பங்காற்றியுள்ளனர். இப்போதும் அணியில் சில ஓட்டைகள் இருக்கிறது”
இதையும் படிங்க: அவரோட என்னை கம்பேர் பண்ணி பேசுறது பெருமை தான்.. ஆனா நான் நானா இருக்க ஆசைப்படுறேன் – பிரேவிஸ் பேட்டி
“அடுத்த ஐபிஎல் தொடரில் ருதுராஜ் நிறைய விஷயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. சூர்யவன்சி என் காலில் ஆசீர்வாதம் வாங்கியதால் நான் வயதானவனாக உணர்கிறேன். பேருந்தில் கடைசி இருக்கையில் அமர்கிறேன். அவர் எனது அருகில் அமர்கிறார். ஆண்ட்ரே சித்தார்த்திடம் உங்களுடைய வயது என்ன? என்று கேட்டேன். அவர் என்னை விட 25 வருடங்கள் இளமையானவர்” என்று கூறினார்.



