சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி 43 வயதினை எட்டியுள்ள வேளையில் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டு 18-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது அவருக்கு கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு கோப்பையுடன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து விடைபெற வேண்டும் என்று ரசிகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த ஆண்டு சிஎஸ்கே அணி எங்கு விளையாடினாலும் அங்கு மஞ்சள் நிறத்தில் ரசிகர்கள் நிரம்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்து எனக்கு பிடித்த மைதானம் : எம்.எஸ் தோனி
கடந்த ஆண்டே சென்னை அணி இந்தியாவின் எந்த மூலையில் விளையாடினாலும் அங்கு பெரியளவில் சிஎஸ்கே ரசிகர்கள் ஆதரவு தந்தனர். எனவே இந்த ஆண்டும் சென்னை அணி விளையாடும் அனைத்து போட்டிகளுக்கும் ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் பிரத்தியேகமாக ஒளிபரப்பும் “தி எம்.எஸ்.டி எக்ஸ்பீரியன்ஸ்” என்கிற நிகழ்ச்சியில் தோனி ஐபிஎல் தொடரில் கிடைக்கும் ரசிகர்களின் ஆதரவு குறித்த பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தோனி கூறியதாவது : ரசிகர்களுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளனாக இருக்க விரும்புகிறேன்.
நான் எவ்வளவு காலம் விளையாடினாலும் அவர்கள் என்னை தொடர்ந்து ஆதரிக்கிறார்கள். அவர்கள் என் மீது காட்டும் அன்பு என்னை வியக்க வைக்கிறது. இந்தியாவின் எந்த மூலைக்கு நான் சென்றாலும் என்னை காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதோடு என்னை பார்த்து உற்சாகம் அடைகிறார்கள். எங்களது அணிக்கும் ஆதரவு தருகிறார்கள் இது ஒரு அற்புதமான உணர்வு. சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்து எனக்கு பிடித்த இரண்டாவது மைதானம் என்றால் மும்பை வான்கடே மைதானத்திற்கு ஒரு சிறப்பு இடமுள்ளது.
ஏனெனில் 2007 டி20 உலக கோப்பை தொடரை வென்ற பிறகு மும்பையில் எங்களுக்கு கிடைத்த வரவேற்பு மறக்க முடியாதது. அதேபோன்று 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டியும் மும்பையில் தான் நடந்தது. இப்படி மும்பை வான்கடே மைதானத்தில் என் உடனான தொடர்பு நிறைய இருக்கிறது.
இதையும் படிங்க : ருதுராஜ் கெய்க்வாட்டை உதாரணமாக வைத்து ரோஹித் சர்மாவை குத்தி காட்டினாரா தோனி – விவாதத்தை கிளப்பிய பேட்டி
மற்றபடி இந்தியாவில் உள்ள எந்த மைதானத்திற்கு சென்றாலும் எனக்கு இதே போன்ற ஆதரவு கிடைக்கும். குறிப்பாக பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத் மைதானங்களில் கூட பெரியளவில் ரசிகர்கள் என்னை ஆதரிப்பார்கள் இருந்தாலும் சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுடன் எனக்கு கிடைக்கும் அந்த ஆதரவு எப்போதுமே தனி சிறப்பான ஒன்று என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.



