இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்க்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மிக முக்கிய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து ஏப்ரல் 5-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீண்டும் கேப்டன் பதவியை ஏற்கப்போகும் தல தோனி :
இந்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தங்களது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி இந்த தொடரை அமோகமாக துவங்கியிருந்தது. ஆனால் அதற்கடுத்த போட்டியில் ஆர்சிபி அணியிடமும், அதன் பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து தற்போது புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.
இப்படி சி.எஸ்.கே அணி பெற்ற அடுத்தடுத்த இரண்டு தோல்விகளுக்கு பின்னர் நாளை ஏப்ரல் 5-ஆம் தேதி மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது. நாளைய இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் கம்பேக் கொடுக்கும் முனைப்புடன் சி.எஸ்.கே அணி காத்திருக்கிறது. இதன் காரணமாக ரசிகர்களும் இந்த போட்டியை காண ஆவலாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நடைபெற இருக்கும் இந்த டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் தோனி கேப்டனாக விளையாடுவார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஏனெனில் கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு காயம் ஏற்பட்டது இதன் காரணமாக அவர் நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக்கல் ஹஸ்ஸி கூறுகையில் : ருதுராஜ் கெய்க்வாட் கடந்த போட்டியின் போது காயமடைந்தார். அதன் காரணமாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா? என்பது உறுதி கிடையாது. இருந்தாலும் அவர் வலைப்பயிற்சியில் எவ்வாறு செயல்படுகிறாரோ அதனை வைத்து தான் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது தெரியும்.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கெதிரான போட்டியிலும் தமிழக வீரர் நட்டு விளையாடமாட்டார் – காரணம் என்ன?
ஒருவேளை அவர் விளையாட முடியாமல் போனால் நம்மிடம் இளம் விக்கெட் கீப்பராக இருக்கும் ஒருவர் கேப்டன் இடத்தை பூர்த்தி செய்வார் என்று மைக்கல் ஹஸ்ஸி கூறியுள்ளார். அவர் கூறியதை வைத்து பார்க்கும்போது ஒருவேளை ருதுராஜ் கெய்க்வாட் டெல்லி அணிக்கெதிரான போட்டியில் விளையாடவில்லை என்றால் தோனி கேப்டனாக மீண்டும் செயல்பட இருப்பது உறுதி.



