எனக்கும் கோபம் வரும் ஆனால் – களத்தில் கூலாக இருக்கும் ரகசியம் பற்றி தோனி ஓப்பனாக பேசியது என்ன?

Dhoni-1
- Advertisement -

கிரிக்கெட் மிகவும் பிரபலம் இல்லாத ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்து இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் ரயில்வே வேலையையும் தூக்கி எறிந்த எம்எஸ் தோனி உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடியாக செயல்பட்டு அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலியின் கவனத்தை ஈர்த்து 2004இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்பத்தில் தடுமாறினாலும் நாட்கள் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி தனக்கென்று தனி ஸ்டைலையும் இடத்தையும் பிடித்த அவர் மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்து இந்தியாவின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக அவதரித்தார். அதேபோல் 2007இல் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழிநடத்தி தைரியமான முடிவுகளை எடுத்து டி20 உலகக்கோப்பையை வென்ற அவர் 2010இல் இந்தியாவை நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக தரம் உயர்த்தினார்.

Trophies Won By MS Dhoni

- Advertisement -

மேலும் 2011இல் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து உலக கோப்பையை வென்ற அவர் 2013இல் தாம் உருவாக்கிய வீரர்களை வைத்து சாம்பியன்ஸ் கோப்பையை வென்று 3 விதமான உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்தார். மின்னல் வேக விக்கெட் கீப்பிங், அதிரடியான பினிசர், விராட் கோலி – ரோகித் சர்மா போன்ற அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கிய கேப்டன் போன்ற பல பரிணாமங்களை கொண்ட அவர் களத்தில் எவ்வளவு அழுத்தமான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதை பொறுமையாகவும் அமைதியாகவும் கையாள்வதில் கில்லாடியாவார்.

கூல் கேப்டன் தோனி:
குறிப்பாக தோல்வியே சந்தித்தாலும் உலக கோப்பை வென்றாலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரை “கூல் கேப்டன்” அனைவரும் என்றழைக்கிறார்கள். இருப்பினும் அவரும் மனிதன் தானே என்ற வகையில் எப்போதாவது கோபத்தை வெளிப்படுத்தும் அவர் 90% தருணங்களில் என்ன நடந்தாலும் கூலாக இருக்கக்கூடியவர். அதனாலேயே அடுத்த தலைமுறை இளம் கேப்டன்கள் அவரை பின்பற்ற வேண்டும் என்று வல்லுனர்கள் சொல்வார்கள். இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் எப்படி பெரும்பாலான சூழ்நிலைகளில் உங்களால் கூலாக இருக்க முடிகிறது என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர்.

Dhoni

அதற்கு பதிலளித்து தோனி பேசியது பின்வருமாறு. “உங்களில் எத்தனை பேர் உங்கள் முதலாளிகள் அமைதியாக இருப்பதாக நினைக்கிறீர்கள்? உண்மையை சொல்ல வேண்டுமெனில் களமிறங்கும் போது நாங்கள் அனைவரும் தவறான பீல்டிங், கேட்ச்களை தவற விடுவது போன்ற எந்த தவறையும் செய்ய விரும்ப மாட்டோம். இருப்பினும் ஒருவர் கேட்ச் தவறவிட்டு சுமாராக பீல்டிங் செய்யும் போது அந்த வீரர் ஏன் அவ்வாறு செய்தார் என்பதை தெரிந்து கொள்ள மட்டுமே முயற்சிப்பேன். ஏனெனில் கோபப்படுவது எந்த உதவியையும் செய்யாது. மேலும் ஏற்கனவே மைதானத்திலிருக்கும் 40,000 ரசிகர்களும் தொலைக்காட்சி வாயிலாக கோடிக்கணக்கான ரசிகர்களும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்”

- Advertisement -

“எனவே தவறுக்கான காரணத்தை மட்டுமே நான் பார்க்க வேண்டும். ஒரு வீரர் 100% அர்ப்பணிப்புடன் களத்தில் விளையாடும்போது கேட்ச்சை தவற விடுவது எனக்கு பிரச்சனை கிடையாது. மேலும் வலை பயிற்சியிலும் அதற்கு முன்பாகவும் அவர் எத்தனை கேட்ச்களை பிடித்தார் என்பதை நான் பார்க்க வேண்டும். எனவே தவறு செய்யும் போது அதை திருத்திக் கொண்டு சிறப்பாகச் செயல்படுவதற்கான உழைப்பை அவர் கொடுக்க வேண்டும். இது போன்ற அம்சங்களை மட்டும் தான் நான் பார்ப்பேனே தவிர கேட்ச் தவிர விட்டதை பார்க்க மாட்டேன். ஒருவேளை அதனால் நாங்கள் போட்டியில் தோற்றாலும் அந்த வீரர் முன்னேற்றமடையவே நாங்கள் முயற்சிப்போம்” என்று கூறினார்.

dhonii

மேலும் எப்போதும் கூலாக இருப்பது பற்றி தோனி பேசியது பின்வருமாறு. “நானும் மனிதன் தான். அழுத்தமான தருணங்களில் நீங்கள் அனைவரும் நினைப்பது போன்ற உணர்வுகள் எனக்குள்ளேயும் ஏற்படும். இருப்பினும் அதையே நினைத்துக் கொண்டு நீங்கள் விளையாடுவது மோசமான உணர்வை கொடுக்கும். ஆனால் நாட்டுக்காக விளையாடும் நீங்கள் அது போன்ற உணர்வுகளை தவிர்த்துவிட்டு உங்களது உணர்வுகளை எப்போதும் கட்டுப்படுத்திக் கொண்டு விளையாட முயற்சிக்க வேண்டும்”.

இதையும் படிங்க : IND vs AUS : பாகிஸ்தானின் உலக சாதனையை சமன் செய்த இந்தியா – நாளை முழுமையாக தனதாக்குமா?

“மேலும் வெளியில் அமர்ந்து கொண்டு பார்க்கும் போது நாங்கள் இந்த வகையில் விளையாடியிருக்க வேண்டும் என்று சொல்வது எளிதாகும். ஆனால் உண்மையிலேயே அது அவ்வளவு எளிதானதல்ல. அத்துடன் எங்களது நாட்டுக்காக நாங்கள் விளையாடுவது போல் எதிரணியும் அவர்களது நாட்டுக்காக விளையாடுகிறார்கள். அதுபோக நீங்கள் விளையாடுவதற்கு நிறைய போட்டிகள் வந்து கொண்டே இருக்கும். அதில் மேடு பள்ளங்களும் இருந்து கொண்டே இருக்கும்” என்று கூறினார்.

Advertisement