IND vs AUS : பாகிஸ்தானின் உலக சாதனையை சமன் செய்த இந்தியா – நாளை முழுமையாக தனதாக்குமா?

IND Japrit Bumrah
- Advertisement -

உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது. அதனால் கோப்பையை வெல்ல நிச்சயம் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் செப்டம்பர் 23ஆம் தேதியான நேற்று 2வது போட்டி நடைபெற்றது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இரவு 7 மணிக்கு துவங்க வேண்டிய அப்போட்டி ஈரமான மைதானம் காரணமாக இரண்டரை மணி நேரம் தாமதமாக 9.30 மணிக்கு தலா 8 ஓவர்கள் கொண்ட போட்டியாக துவங்கியது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 90/5 ரன்கள் குவித்தது.

Axar Patel

- Advertisement -

கேமரூன் கிரீன் 5 (4) கிளன் மேக்ஸ்வெல் 0 (1) டிம் டேவிட் 2 (3) என முக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச் அதிரடியாக 4 பவுண்டரி 1 சிக்சருடன் 31 (15) ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் மேத்யூ வேட் 4 பவுண்டரி 3 சிக்சருடன் சரவெடியான 43* (20) ரன்களை குவித்து ஃபினிசிங் கொடுத்தார். மறுபுறம் ரன்களை வாரி வழங்கிய இந்திய பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் அதிக பட்சமாக அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

ஹிட்மேன் அதிரடி:
அதை தொடர்ந்து 91 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் 10 (6) ரன்களில் ஆடம் ஜாம்பாவிடம் அவுட்டாக அடுத்து களமிறங்கி 2 பவுண்டரியுடன் அதிரடி காட்ட முயன்ற விராட் கோலியும் அவரிடமே 11 (6) ரன்களில் அவுட்டானார். அந்த சமயத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் அவரிடமே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்ததால் பின்னடைவை சந்தித்த இந்தியாவுக்கு ஹர்திக் பாண்டியாவும் 9 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனாலும் மறுபுறம் நங்கூரமாக அதிரடி காட்டிய மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவின் அழுத்தத்துக்கு அஞ்சாமல் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 46* (20) ரன்களை விளாசி வெற்றியை உறுதி செய்தார்.

ROhit Sharma Matthew Wade

இறுதியில் தினேஷ் கார்த்திக் சிக்சர் மற்றும் பவுண்டரியை அடித்து 10* (2) ரன்களுடன் பினிசிங் கொடுத்ததால் 7.2 ஓவரில் 92/4 ரன்களை எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வாழ்வா சாவா என்றமைந்த இப்போட்டியில் வாழ்வை கண்டது. மேலும் சொந்த மண்ணில் எளிதில் சாய்ந்து விடமாட்டோம் என்று ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள இந்தியா 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு 46* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

உலகசாதனை சமன்:
முன்னதாக விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமையில் லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியாவுக்கு முழுநேர கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்றார். அவரது தலைமையில் அதன்பின் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் தோல்வியே அடையாமல் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியது. இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்து பின்னடைவுக்கு உள்ளான இந்தியா தற்போது சொந்த மண்ணில் வலுவான ஆஸ்திரேலியாவுடன் போட்டி போட்டு வருகிறது.

INDvsPAK

அந்த வகையில் நாக்பூரில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் பதிவு செய்த வெற்றியும் சேர்த்து இந்த வருடம் 20 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் உலக சாதனையை சமன் செய்துள்ளது. அந்த பட்டியல்:
1. இந்தியா : 20* வெற்றிகள் (2022)
2. பாகிஸ்தான் : 20 வெற்றிகள் (2021)
3. பாகிஸ்தான் : 17 (2018)

இதனால் செப்டம்பர் 25ஆம் தேதியான நாளை ஹைதராபாத் நகரில் நடைபெறும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் வெல்லும் பட்சத்தில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற உலக சாதனையை முழுமையாக தனதாக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. எனவே நாளைய கடைசி போட்டியில் முழுமூச்சுடன் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து கோப்பையை வெல்வதுடன் இந்த உலக சாதனையை முழுமையாக இந்தியா தனதாக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement