ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற 30வது போட்டியில் லக்னோவை அதன் சொந்த மண்ணில் சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 167 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிசப் பண்ட் 63, மிட்சேல் மார்ஷ் 30 ரன்கள் எடுத்தனர்.
சென்னைக்கு அதிகபட்சமாக ஜடேஜா, பதிரனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்ததாக விளையாடிய சென்னை அணிக்கு துவக்க வீரர்கள் சாய்க் ரசீத் 27, ரச்சின் ரவீந்திரா 37 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் மீண்டும் ராகுல் திரிபாதி 9, ஜடேஜா 7, விஜய் சங்கர் 9 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
சென்னை வெற்றி:
அப்போது சிவம் துபே அதிரடியாக விளையாடி 43* (37) ரன்கள் எடுத்தார். அவருடன் சேர்ந்த கேப்டன் தோனி அதிரடியாக 26* (11) ரன்கள் எடுத்து அசத்தினார். அதனால் 19.3 ஓவரில் இலக்கைத் தொட்ட சென்னை 5 தொடர் தோல்விகளுக்குப் பின் இரண்டாவது வெற்றிப் பெற்று நிம்மதி பெருமூச்சு விட்டது. லக்னோவுக்கு அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 2 விக்கெட் எடுத்தும் 3வது தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
இந்த வெற்றிக்கு முக்கிய நேரத்தில் அதிரடியாக 26 ரன்கள் எடுத்து உதவிய தோனி ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இந்நிலையில் இந்தப் போட்டியில் தம்மை விட சாய்க் ரசித் பேட்டிங்கிலும், நூர் அஹ்மத் பவுலிங் துறையிலும் அசத்தியதாக தோனி கூறியுள்ளார். அப்படிப்பட்ட நிலையில் நூர் அஹ்மத் போன்றவருக்கு விருதை வழங்காமல் தமக்கு ஆட்டநாயகன் விருது வென்றது ஏன் என்று நினைத்ததாக தோனி பெருமிதத்துடன் பேசியுள்ளார்.
ஆட்டநாயகன் தோனி:
மேலும் சாய்க் ரசீத் இதை விட இன்னும் சிறப்பாக விளையாடும் திறமையை கொண்டுள்ளதாக தெரிவிக்கும் தோனி இது பற்றி பேசியது பின்வருமாறு. “சாய்க் ரசித் இன்று சிறப்பாக பேட்டிங் செய்தார் என்று நினைக்கிறேன். அவர் எங்கள் அணியில் சில வருடங்களாக இருந்து வருகிறார். இந்த வருடம் வலைப்பயிற்சியில் அவர் வேகம் மற்றும் சுழல் பவுலர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். இது ஆரம்பம் மட்டுமே”
இதையும் படிங்க: 5 தொடர் தோல்விக்கும் லக்னோவில் வெற்றி பெறவும் இதான் 2 காரணம்.. கடவுள் சோதிச்சுட்டாரு.. தோனி பேட்டி
“அவர் எதிரணிகளை டாமினேட் செய்து அதிரடியாக விளையாடக்கூடிய திறமையைக் கொண்டுள்ளார். இன்று எனக்கு ஏன் ஆட்டநாயகன் விருது விருதை கொடுத்தார்கள்? என்று நான் நினைத்தேன். ஏனெனில் நூர் அஹ்மத் சிறப்பாக பவுலிங் செய்தார்” என்று கூறினார். மொத்தத்தில் இந்தப் போட்டியின் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக வயதில் ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.