இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஓய்வுக்கு பின் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் 42 வயதை கடந்து விட்ட அவர் முழங்காலில் காயத்தை சந்தித்து அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதனால் சமீபத்திய வருடங்களில் அவர் பேட்டிங் வரிசையில் 7, 8 போன்ற லோயர் ஆர்டரில் களமிறங்கினார்.
அந்த வாய்ப்பிலும் அதிரடியாக விளையாடிய தோனி வயதானாலும் ஸ்டைல் மாறாது என்பதை நிரூபிக்கும் வகையில் சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். அதனால் அவருடைய ஆட்டத்தை பார்ப்பதற்காக 4, 5, 6 போன்ற இடங்களில் கொஞ்சம் மேலே களமிறங்க வேண்டும் என்று ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் முழங்கால் வலியால் தோனி மேலே விளையாட முடியாது என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்தது.
சுயநலமற்ற தோனி:
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் 2024 டி20 உலகக் கோப்பையில் ஜடேஜா, சிவம் துபே ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதியதாக எம்எஸ் தோனி கூறியுள்ளார். அதனாலேயே தங்களுடைய ஃபார்மை இந்திய அணிக்கு காண்பிப்பதற்காக துபே, ஜடேஜாவுக்கு மேல் வரிசையில் விளையாடும் வாய்ப்பை கொடுத்து தாம் 8வது இடத்தில் விளையாடியதாக தோனி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் சமீபத்தில் பேசியது பின்வருமாறு.
“என்னுடைய சிந்தனை மிகவும் எளிது. அதாவது மற்றவர்கள் அவர்களது வேலையை செய்யும் போது நான் ஏன் மேலே பேட்டிங் செய்ய செல்ல வேண்டும். கடந்த ஐபிஎல் தொடர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் சூழ்நிலையில் நடைபெற்றது. எனவே அதில் இடம் பிடிக்க போராடும் வீரர்களுக்கு நாங்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டியிருந்தது”
மற்ற வீரர்களுக்காக:
“எங்கள் அணியில் துபே, ஜடேஜா அதுபோன்ற வீரர்களாக இருந்தனர். எனவே இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக தங்களது திறமையை நிரூபிக்க நாங்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். ஏனெனில் ஓய்வு பெற்ற எனக்கு எதுவும் இல்லை. அதனால் நான் பேட்டிங் வரிசையில் கீழே விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. நான் செய்ததில் அணியும் மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறினார்.
இதையும் படிங்க: இதைமட்டும் செய்ஞ்சா போதும்.. ஆஸ்திரேலிய தொடரில் முகமது ஷமி இடம்பிடிக்க வாய்ப்பு – விவரம் இதோ
இதிலிருந்து காயத்தால் அல்ல மற்ற வீரர்களுக்கு வாய்ப்பை வழங்குவதற்காக தோனி கீழே களமிறங்கியது தெரிகிறது. அவருடைய இந்த சுயநலமற்ற முடிவு சிஎஸ்கே ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைகிறது. இந்த நிலையில் ஐபிஎல் 2025 தொடரில் சிஎஸ்கே அணிக்காக மீண்டும் தோனி அன்கேப்ட் வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



