ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற 38வது போட்டியில் சென்னையை 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 177 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53*, சிவம் துபே 50, ஆயுஸ் மாத்ரே 32 ரன்களை எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய மும்பை 15.4 ஓவரிலேயே 177-1 ரன்கள் எடுத்து எளிமையாக தங்களுடைய 4வது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரோஹித் சர்மா நீண்ட நாட்கள் கழித்து அபாரமாக விளையாடி 76* ரன்கள் எடுத்தார். அவருடன் சூரியகுமார் யாதவ் 68* ரன்கள் அடித்து அசத்தினார்.
சென்னை படுதோல்வி:
மறுபுறம் 2008க்குப்பின் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற சென்னை தங்களுடைய 6வது தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் வரலாற்றிலேயே முதல் முறையாக ப்ளே ஆஃப்ஸ்க்கு தகுதி பெறாத 2020 போல் 2025 சீசனில் சிஎஸ்கே தடுமாறுவதாக கேப்டன் தோனி கவலைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக பேட்டிங், ஃபீல்டிங் துறைகளில் உள்ள ஓட்டைகளை அடைக்கப் பார்த்தும் முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இப்போதும் அடுத்தப் போட்டிகளில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறுவோம் என்று தெரிவிக்கும் தோனி அது நடக்காவிட்டால் அடுத்த வருடம் வலுவாக கம்பேக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடியதால் வெற்றிகரமாக இருந்தோம் என்பதை இப்போது உணர வேண்டும். இது போன்ற சமயத்தில் உணர்ச்சி வசப்படாமல் நிதர்சனமாக இருக்க வேண்டும்”
தோனி கவலை:
“2020 சீசன் எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை என்று நினைக்கிறேன். எனவே நாங்கள் கிரிக்கெட்டின் சரியான வடிவத்தை விளையாடுகிறோமா? எங்களுக்கு நாங்களே அப்ளை செய்து செயல்படுகிறோமா? என்ற கேள்விக்குறிகளைப் பார்க்க வேண்டும். சில கேட்ச்களை பிடிப்பது வெற்றிக்கு உதவும். அதைத் தவிர்த்து நாங்கள் நிறைய ஓட்டைகளை அடைக்கப் பார்க்கிறோம்”
இதையும் படிங்க: பும்ரா உலகின் சிறந்த பவுலர்.. அவரை மாதிரி பேட்டிங் செய்யாததே சிஎஸ்கே தோல்விக்கு இதான் காரணம்.. தோனி பேட்டி
“(பிளே ஆஃப் செல்ல) அடுத்ததாக எங்களுக்கு முன்பே இருக்கும் அனைத்துப் போட்டிகளையும் நாங்கள் வென்றாக வேண்டும். நாங்கள் ஒரு சமயத்தில் ஒரு போட்டியை எடுத்து விளையாடுகிறோம். ஒருவேளை சில போட்டிகளில் தோற்றால் அடுத்த வருடத்திற்கான சரியான கலவையை உருவாக்குவது முக்கியம். நீங்கள் நிறைய வீரர்களை மாற்ற விரும்ப மாட்டீர்கள். இங்கிருந்து நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முயற்சி செய்வது முக்கியம். ஒருவேளை இந்த வருடம் எங்களுக்கு பாதுகாப்பான லெவன் அமையாவிட்டால் அடுத்த வருடம் வலுவாக கம்பேக் கொடுப்போம்” என்று கூறினார்.



