
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆரம்ப கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என சி.எஸ்.கே அணியின் நிர்வாகம் அறிவித்தது. அதன்படியே ஆரம்பகட்ட போட்டிகளை தவறவிட்ட தோனி எப்படியும் இந்த தொடரில் விளையாடுவார் என்பதை காண ரசிகர்கள் சி.எஸ்.கே அணி மோதும் போட்டிகளுக்கு நேரில் மைதானத்திற்கு வந்து குவிந்து வருகின்றனர்.
ஆனால் தற்போது வரை நடைபெற்று முடிந்துள்ள 11 ஆட்டங்களில் தோனி இதுவரை பிளேயிங் லெவனில் இணைந்து விளையாடவில்லை. அதோடு சென்னையில் இருந்தாலும் அவர் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருவதில்லை. அதுமட்டும் இன்றி சென்னை அணி எங்கு பயணித்தாலும் அணியுடன் பயணிக்காமல் பயிற்சிகளை மட்டுமே தோனி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் லக்னோ அணிக்கு எதிராக வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருக்கும் போட்டியில் அவர் விளையாடுவார் என்றும் அதற்காக அவர் லக்னோ நகருக்கு அவர் சென்னை அணியுடன் பயணிப்பார் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் சிஎஸ்கே அணியின் வீரர்கள் புறப்படும் வேளையில் தோனி இந்த போட்டிக்காகவும் அணி வீரர்களுடன் பயணிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக தோனியின் ரசிகர்கள் தற்போது மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது 44 வயதாகும் அவருக்கு இதுவே கடைசி தொடர் என்பதனால் எப்படியாவது தோனியின் ஆட்டத்தை கண்டுவிட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இந்த சீசனில் தோனி விளையாட மாட்டார் என்றே தெரிகிறது.
இதையும் படிங்க : கிரிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி விராட் கோலி நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ
ஏனெனில் காயத்திலிருந்து அவர் மீண்டு இருந்தாலும் அணியின் வெற்றி காம்பினேஷனை உடைக்கக்கூடாது என்பதாலும் மேலும் காயத்தை தீவிரப்படுத்த கூடாது என்பதாலும் தோனி இதுவரை விளையாடாமல் இருந்து வருகிறார். ஒருவேளை சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றால் நிச்சயம் அவர் வெளியில் அமர்ந்து வீரர்களின் ஆட்டத்தை பார்ப்பாரே தவிர அவர் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.