
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தை நடத்த பிசிசிஐ முழு வீச்சில் தயாராகி வருகிறது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கு முன்பாக அதிகபட்ச வீரர்களை தக்க வைக்கும் விதிமுறைகளில் பிசிசிஐ சில மாற்றங்களை செய்துள்ளது. அதன் படி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைக்க முடியும்.
அதை விட சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த அன்கேப்ட் விதிமுறைக்கு பிசிசிஐ பச்சைக் கொடி காட்டியுள்ளது. அதாவது 42 வயதாகும் தோனி இன்னும் ஓரிரு வருடங்கள் மட்டுமே விளையாட உள்ளார். அது போன்ற சூழ்நிலையில் தோனியை முதல் வீரராக தக்க வைத்தால் கேப்டன் ருதுராஜ், ஜடேஜா, பதிரனா, துபே உள்ளிட்ட முக்கிய வீரர்களை தக்க வைக்க முடியாத நிலைமை சிஎஸ்கே அணிக்கு ஏற்படும்.
அதனால் தோனியை அன்கேப்ட் வீரராக தக்க வைக்க அனுமதிக்குமாறு பிசிசிஐயிடம் சிஎஸ்கே நிர்வாகம் கோரிக்கை வைத்தது. அதை தற்போது ஏற்றுக் கொண்டுள்ள பிசிசிஐ “சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய இந்திய வீரர் கடந்த 5 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய எந்த வகையான அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறாமல் அல்லது பிசிசிஐ மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இல்லாமல் இருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரராக கருதப்படுவார்”
“இது இந்திய வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும்” என்ற விதிமுறையை அறிவித்துள்ளது. கடந்த 2018 வரை நடைமுறையில் இருந்த இந்த விதிமுறை அதிகம் பயன்படுத்தப்படாததால் நீக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தோனிக்காக மீண்டும் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது என்றே சொல்லலாம். இந்த விதிமுறையின் படி 2019 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்ற தோனி கடந்த 5 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை.
எனவே அவரை தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் விதிமுறையை பயன்படுத்தி சிஎஸ்கே அணியால் குறைந்தபட்ச விலைக்கு தக்க வைக்க முடியும். குறிப்பாக 20 லட்சத்திலிருந்து தோனியை சிஎஸ்கே அணியால் தக்க வைக்க முடியும். இருப்பினும் மிகப்பெரிய ஜாம்பவானான தோனியை 4 கோடிக்கு சிஎஸ்கே தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ருதுராஜ்க்கு டாட்டா.. 2 தமிழக வீரர்கள், 155கி,மீ புயலுக்கு இடம்.. வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணி இதோ
அதே போல 2024 ஐபிஎல் தொடரில் தோனி 12 கோடிக்கு விளையாடினார். ஆனால் தற்போது தனது வயதை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணியின் நலனுக்காக அவர் 2025இல் சம்பளத்தை குறைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் 2025 ஐபிஎல் தொடரில் மீண்டும் ரசிகர்களுக்காக தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.