சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் போட்டியானது அகமதாபாத் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சி.எஸ்.கே அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக பிரேவிஸ் 57 ரன்களையும், டேவான் கான்வே 52 ரன்களையும் குவித்தனர்.
தனது ஓய்வு குறித்த ஹின்ட் கொடுத்த தல தோனி :
பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியானது விளையாடி வருகிறது. இந்த தொடரில் சிஎஸ்கே அணிக்கு இதுவே கடைசி போட்டி என்பதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியுடன் வெளியேற வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.
அதேபோன்று தற்போது 43 வயதாகும் தோனிக்கு இதுவே கடைசி போட்டியாகவும் இருக்கும் என சில பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக தோனி எப்போது ஓய்வு பெறுவார்? என்பதே பலரது மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் செய்தியாக இருந்து வருகிறது.
இவ்வேளையில் இன்றைய போட்டியின் டாசின் போது தனது ஓய்வு குறித்த மறைமுகமான சில ஹின்ட்களை தோனி வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் ரவி சாஸ்திரி டாசின் போது எழுப்பிய தனது உடற்தகுதி குறித்த கேள்விக்கு பதிலளித்த மகேந்திர சிங் தோனி கூறுகையில் : என்னுடைய உடம்பு தற்போது ஓரளவுக்கு ஒத்துழைத்து வருகிறது.
ஆனாலும் ஒவ்வொரு வருடமும் ஒரு புது சவால் இருக்கிறது. எனவே என்னுடைய உடம்பை மெயின்டைன் செய்ய அதிக தேவைகள் இருக்கின்றன. தற்போது நான் என்னுடைய இறுதிகட்ட கரியரில் நிற்கிறேன். சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது இவ்வளவு இன்னல்களை எனது உடல் ரீதியாக சந்தித்ததில்லை என தோனி கூறியுள்ளார்.
இதையும் படிங்க : மீண்டும் ஆர்.சி.பி டீமுக்குள் வந்த நட்சத்திர வீரர்.. கடைசி போட்டிக்கு முன்னதாக நடந்த மாற்றம் – விவரம் இதோ
இதன் மூலம் அவர் தன்னுடைய உடற்தகுதி முன்பு போன்று இல்லை என்றும் உடலளவில் பல அசவுகரியங்களை சந்தித்து வருவதை மறைமுகமாக வெளிப்படுத்தி உள்ளார். ஆனாலும் அடுத்த ஆண்டு தான் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேனா? இல்லையா? என்பது குறித்த எந்த ஒரு உறுதியான தகவலையும் அவர் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



