வீடியோ : டிராவிட், சச்சின் மாதிரி அசத்தியும் எனக்கு விருது கொடுக்கல – ஜாலியான கம்ப்ளைண்ட் செய்த தோனி, நடந்தது என்ன

MS Dhoni Harshal Bhogle
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்ற 29வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்தது. தமிழகத்தின் தலைநகர் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் தடுமாற்றமாக செயல்பட்டு 20 ஓவர்களில் 134/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 34 (26) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 135 ரன்களை துரத்திய சென்னைக்கு 87 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ருதுராஜ் கைக்வாட் 35 (30) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ரகானே 9, ராயுடு 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுபுறம் ஹைதராபாத் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு அரை சதமடித்த மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே 12 பவுண்டரி 1 சிக்சருடன் 77* (57) ரன்கள் குவித்து 18.4 ஓவரிலேயே வெற்றி பெற உதவினார்.

- Advertisement -

தோனியின் கம்ப்ளைண்ட்:
முன்னாதாக இந்த போட்டியில் பேட்டிங் செய்யவில்லை என்றாலும் ஃபீல்டர்களை சரியாக நிறுத்தி மிடில் ஓவரில் ஸ்பின்னர்களை மாற்றி மாற்றி பயன்படுத்திய தோனியின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்தது. அதை விட மஹீஸ் தீக்சனா வீசிய 13வது ஓவரின் 5வது பந்தை ஹைதெராபாத் கேப்டன் ஐடன் மார்க்ரம் அதிரடியான வேகத்தில் அடிக்க முயற்சித்தார். ஆனால் சரியாக கணிக்க தவறிய அவர் எட்ஜ் கொடுத்த அந்த பந்து அதே வேகத்தில் தோனியிடம் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத வேகத்தில் வந்த அந்த பந்தை துல்லியமாக பிடித்த தோனி அடுத்த ஓவரிலேயே ரவீந்திர ஜடேஜாவை இறங்கி அடிக்க முயற்சித்த மயங் அகர்வாலையும் மின்னல் வேகத்தில் ஸ்டம்ப்பிங் செய்தார்.

அதே போல கடைசி ஓவரின் கடைசி பந்திலும் வாஷிங்டன் சுந்தரை குறி பார்த்து எறிந்த அவர் ரன் அவுட் செய்தார். அப்படி விக்கெட் கீப்பராக அசத்திய அவர் போட்டியின் முடிவில் ஐடன் மார்க்ரம் கேட்ச் பிடித்ததற்கு “கேட்ச் ஆஃப் மேட்ச்” விருது கொடுக்கவில்லை என்று ஜாலியாக கலாய்க்கும் வகையில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதாவது இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த கேட்ச் பிடிக்கும் வீரர்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டியின் முடிவில் பரிசளித்து வருகிறது. அந்த வகையில் இந்த போட்டியில் ஹரி ப்ரூக் கொடுத்த கேட்ச்சை கிட்டத்தட்ட தரையோடு தரையாக பிடித்த ருதுராஜ் கைக்வாட் அந்த விருதை வென்றார்.

- Advertisement -

இருப்பினும் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத வேகத்தில் வந்த அந்த கடினமான கேட்ச்சை தவறான இடத்தில் நின்று கடந்த காலங்களில் ஜாம்பவான்கள் ராகுல் டிராவிட் – சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் பிடித்ததை போல் சிறப்பாக பிடித்த தமக்கு விருது கிடைக்கவில்லை என்று தெரிவித்த தோனி இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “அவர்கள் எனக்கு சிறந்த கேட்ச் அந்தஸ்தை கொடுக்கவில்லை. அது சிறப்பான கேட்ச் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அந்த சமயத்தில் நான் தவறான இடத்தில் நின்றேன். இருப்பினும் கையுறைகள் அணிந்திருந்ததால் அதை எளிதாக பிடித்து விட்டேன் என்று அனைவரும் நினைக்கிறார்கள்”

“நீண்ட காலத்திற்கு முன்பாக ராகுல் பாய் (டிராவிட்) அதே போல விக்கெட் கீப்பராக பிடித்த கேட்ச் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. உங்களுடைய நுணுக்கங்களால் அந்த மாதிரியான கேட்ச்சை பிடிக்க முடியாது. அந்த கோணத்தில் வேகமாக வரும் அந்த கேட்சை பிடிப்பதற்கு நீங்கள் தவறான இடத்தில் நிற்க வேண்டும். சச்சின் பாஜியும் ஒருமுறை அவ்வாறு பிடித்துள்ளார். மொத்தத்தில் மிடில் ஓவர்களில் எங்களுடைய பவுலிங் சிறப்பாக இருந்தது. இருப்பினும் அவர்கள் சிறந்த கேட்ச் விருதை எனக்கு கொடுக்காததற்கு நான் புகார் செய்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க:வீடியோ : அதிர்ஷ்டம் இல்லையோ – புள்ளிப் பட்டியலில் சென்னைக்கு டாப் 2 இடத்தை மறுத்த வித்யாசமான ரன் அவுட்

அப்படி விருது கிடைக்கவில்லை என்றாலும் அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற குயிண்டன் டீ காக் (207) சாதனையை தகர்த்த தோனி (208) புதிய உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement