ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் 5 தொடர்ச்சியான தோல்விகளை உடைத்துள்ள சென்னை 2வது வெற்றியைப் பெற்று நிம்மதி பெருமூச்சு பெற்றுள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 167 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதைத் துரத்திய சென்னைக்கு இளம் துவக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா 37, சாய்ம் ரசீத் 27 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் மீண்டும் ராகுல் திரிபாதி 9, ஜடேஜா 7, விஜய் சங்கர் 9 ரன்னில் அவுட்டாகி பெரிய பின்னடைவைக் கொடுத்தனர். அதனால் மீண்டும் தோற்குமோ என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணியை சிவம் துபே நிதானமாக விளையாடி 43* (37), கேப்டன் தோனி அதிரடியாக விளையாடிய 26* (11) ரன்கள் எடுத்து 19.3 ஓவரில் வெற்றி பெற வைத்தனர்.
பயந்தா ஜெய்க்க முடியாது:
முன்னதாக அந்தப் போட்டியில் டேவோன் கான்வே, அஸ்வின் ஆகியோரை நீக்கிய கேப்டன் தோனி இளம் வீரர் சாய்க் ரசீத், ஜேமி ஓவர்டன் ஆகியோரை தேர்ந்தெடுத்தார். கடைசியில் அது வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது என்று சொல்லலாம். இந்நிலையில் பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் தொடர்ந்து இதே போல பயந்துக் கொண்டு விளையாடினால் வெற்றி பெற முடியாது என்று தோனி கூறியுள்ளார்.
எனவே லக்னோ போல பிட்ச் கொஞ்சம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதிரடியாக விளையாட வேண்டும் என்று சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு தோனி மறைமுகமாக கட்டளையிட்டுள்ளார். மேலும் அஸ்வினை நீக்கிய காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பிட்ச் நன்றாக இருக்கும் போது நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும்”
அஸ்வின் நீக்கம்:
“அது எங்களுடைய பேட்ஸ்மேன்கள் அவர்களின் ஷாட்டுகளை அடிப்பதற்கான தன்னம்பிக்கையையும் கொடுக்கும். நீங்கள் பயந்த கிரிக்கெட்டை விளையாட விரும்ப மாட்டீர்கள். கடந்த போட்டிகளில் பவுலிங் துறையில் நாங்கள் அஸ்வின் மீது நிறைய அழுத்தத்தைப் போட்டோம். அவர் பவர் பிளே ஓவர்களில் 2 ஓவர்கள் போட்டார். அந்த ஓவர்களை அஸ்வின் சமாளிக்கத் தடுமாறியதால் பௌலிங் துறையில் மாற்றங்கள் செய்தோம்”
இதையும் படிங்க: சி.எஸ்.கே அணி எங்களை ஸ்டெடி பண்ணவே விடல.. அதனால் தான் நாங்க தோத்தோம் – ரிஷப் பண்ட் வருத்தம்
“மாற்றப்பட்ட தற்போதைய பவுலிங் அட்டாக் சிறந்ததாகத் தெரிகிறது. பவுலிங் துறையில் நாங்கள் இன்று நன்றாக செயல்பட்டோம். ஆனால் பேட்டிங் துறையில் இன்னும் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும். வேலை மற்றும் பொறுப்புகள் பற்றி நாங்கள் பேசி வருகிறோம். குறிப்பாக பேட்டிங்கில் உங்களுக்கு நல்ல துவக்கம் கிடைத்தால் நீங்கள் ஏன் போட்டி முழுவதும் விளையாடக்கூடாது என்று பேசினோம். அந்த அணுகு முறையில் இன்று துபே நன்றாக பேட்டிங் செய்தார்” என்று கூறினார்.