இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் வீரருமான தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அது குறித்த செய்திகளுக்கும், அவரின் சாதனைக்கும் ஓய்வே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ள தோனி தற்போது டி20 போட்டியிலும் ஒரு புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே சென்னை அணிக்கு ஒரு பெரிய சிக்கலில் இருந்து வருகிறது. இருந்தாலும் ஒரு கேப்டனாக தோனி அணியை முன்னின்று சிறப்பாக அழைத்து வந்துள்ளார். அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோல்வியுற்று ஹாட்ரிக் தோல்விகளை அடைந்தாலும் அணியை மாற்றாமல் இருந்தார்.
கடைசியாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திருப்பியுள்ளது. இந்நிலையில் அந்த போட்டிக்கு முன்பாக நடைபெற்ற சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பேட்டிங் செய்ததன் மூலம் தோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது உலக அளவில் டி20 போட்டிகளில் தொடர்ந்து 100 இன்னிங்ஸ்களில் டக் அவுட் ஆகாமல் இருந்த ஒரே முதல் இந்திய வீரர் என்ற சாதனையை தோனி பெற்றுள்ளார். உலக அளவில் டோனி ஐந்தாவது இடத்தில் இருந்தாலும் இந்திய பேட்ஸ்மேனாக முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் தோனி டக் அவுட் ஆனார்.
அதன் பிறகு 100 போட்டியில் பேட்டிங் செய்ய களமிறங்கி தற்போது வரை அவுட் ஆகாமல் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் மேற்கிந்திய வீரர் க்றிஸ் கெயில் 2012 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை 145 டி20 போட்டிகளில் விளையாடி டக் அவுட் ஆகாமல் இருந்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.